தூத்துக்குடி மாவட்டம்
கழுகுமலை :-
கழுகுமலை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் (38) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சின்ன மாரியப்பன் என்பவரிடம் சீட்டு பணம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் முழுவதையும் கட்டிய நிலையில் சின்ன மாரியப்பன், சிவசங்கரனை தொந்தரவு செய்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் போலீசார் சின்னமாரியப்பனை கைது செய்தனர்.
கோவில்பட்டி:-
கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மீனாட்சி (60) என்பவர் இம்மாதம் 5-ம் தேதி அவரது வீட்டில் விளக்கு ஏற்றிய போது ஆடையில் தீப்பற்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:-
கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் திருச்சி சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பாத்திரங்களை திருடிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (36) மற்றும் சரவணன் (43) ஆகிய இருவரை கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:-
ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (59) என்பவர் காலை திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஈஸ்வர முத்து என்பவரின் பைக், முருகனின் பைக் மீது மோதிக்கொண்டது. இதில் முருகன் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:-
கோவில்பட்டி அருள்மிகு பூமாதேவி நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதே பகுதியை சேர்ந்த 3 பெண்களிடமிருந்து தங்கள் சங்கிலிகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மூவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆறுமுகநேரி:-
ஆறுமுகநேரி புறவழிச்சாலை பகுதியில் பைக்கில் வந்த பிரபாகர் (30) என்பவரிடம் கடந்த ஜூலை 5ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது. இது குறித்து ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த பூஜை மணி என்பவரை போலீசார் கைது: செய்தனர்.
கோவில்பட்டி:-
கோவில்பட்டி முத்து நகர் பகுதியை சேர்ந்த சண்முக கனி (72) என்பவர் அங்கு தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்கு 50 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை பொருட்கள் திருடு போனது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அதே பகுதியை சேர்ந்த சங்கர் (40) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி வடக்கு:-
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (28) என்பவர் மட்டக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கையும் களவுமாக பிடித்த போலீசார் முத்துராஜை கைது செய்து அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வடபாகம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.








