தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71அடி உயர நீர்த்தேக்கக் கொள்ளளவில் அமைந்துள்ளது வைகை அணை. மூல வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கிடைக்கப் பெறும் தண்ணீரால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5மாவட்டங்களில் உள்ள 2லட்சத்து 10ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைகின்றன. மேலும் தேனி, மதுரை மாவட்டங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபரில் இரண்டாம் போக பாசனத்திற்கு திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை இல்லாததால் முதல் போக பாசனத்திற்கே தாமதமாகவே வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூல வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணை ஆகிய இடங்களில் பெய்த மழையால் வைகையின் நீர்மட்டம் உயர்ந்தே காணபட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கோடை மழையால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் வைகையின் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து மே 26ஆம் தேதி 66அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் இன்று முதல் 120நாட்களுக்கு 6,739 மி.கன அடி தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதித்துறை அமைச்;சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று தண்ணீர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச் செல்வன் சட்டமன்ற உறுப்பினர்கள், கம்பம் ராமகிருஷ்ணன் சரவணக்குமார் மகாராஜன் பொதுப்பணித்துறையினர் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 1,797ஏக்கரும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16,452ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26,792ஏக்கர் என ஆக மொத்தம் 45,041 நிலங்கள் பாசன வசதி அடைகின்றன.