வெற்றிடம், வெற்றிடம் என்றார்களே, அது அதிமுகவில் இன்னமும் இருப்பதாக தொண்டர்கள் நினைக்கிறார்கள். அதிமுக ஒரு வித்தியாசமான கட்சி. கொள்கை, கோட்பாடு பற்றியெல்லம அதிக கவலை இல்லை. தலைமை, தலைமை தான் முக்கியம். கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் காலம் முதல் கட்டளைக்கு மட்டுமே பணிந்து வந்த தொண்டர்களை கொண்ட அந்தக் கட்சியில் திடீரென சுயமாக சிந்திக்கும் சூழலை உடுவாக்க அவ்வளவு விரைவாக முடியாது.
சசிகலாவின் தலைமைக்கு கட்டுப்பட அனைவரும் தயாராக இருந்த போது சட்டம் அவர்களை பிரித்துவிட்டது. அடிமை அரசராக அரியணை ஏறினாலும், நாளாவட்டத்தில் ஆட்சியை நிர்வகித்து, கட்சியினர் நம்பிக்கையையும் எடப்பாடி பழனிச்சாமி பெற்றார்.

ஆனாலும், அவர் ச்தந்திரமாக செயல்பட முடியாதவாறு கட்சிக்குள்ளேயே ஓபிஎஸ் உள்ளிட்ட ஒரு லாபி இருந்ததோடு, ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு பயந்தே செயல்பட்டதால் தேர்தலில் தோல்வி அடைய காரணமாகிவிட்டது. தேர்தல் காலகட்டத்தில் வெளிவந்துவிட்ட சசிகலா தன்னை கட்சியில் இணைத்துக்கொள்வார்கள் என்று எண்ணிய எண்ணத்தை மண்ணாக்கி விட்டதால் அவர் வெறுத்துப்போய், கடந்த மார்ச் 3ஆம் தேதி தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஆனால், அப்போதே அது சீச்சி இந்தப் பழம் புளீக்கும் கதை தான் என்பது அரசியல், நோக்கர்கள் அறிந்தே வைத்திருந்தனர். காற்று சாதகமாக வீசும்போது களமிறங்குவார் என்றே நமது இதழிலும் எழுதினோம். இடைவேளை விட்ட படத்தின் கதை தொடர்ச்சியாக மீண்டும் தேர்தல் தோல்வியால் துவண்டும், குழு மனப்பான்மையால் வெறுத்தும் போய் கிடக்கின்ற இரு அணியினரின் அதிருப்தியால் மீண்டும் அதிமுகவை கைப்பற்ற சசிகலா தயாராகிவிட்டார்.

அதற்கான திரை மறைவு வேலை கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடந்தே வருகிறது. முக்கிய தலைவர்களை தனித்தனியாக அவரவர்க்குரிய ஆட்கள் மூலம் சந்தித்து வருகின்றனர். அடிமட்ட அளவிலிருந்து மன மாற்ற முயற்சியும் நடக்கிறது. திமுகவுக்கு டஃப் கொடுக்க இதுவே சரி என்று பலரும் கருதும் வகையில் சூழல் மாறிவருகிறது. இதனால் சசிகலா வரவு விரைவில் இருக்கும் என்றே தெரிகிறது.
அதற்கேற்ப, அவர் தொண்டர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளிவந்துள்ளது. அதில், நீங்கள் கவலைப்படவேண்டாம், நான் நிச்சயம் வருவேன் என்று சசிகலா கூறுகிறார். கட்சியை சரி செய்து விடலாம் என்று நம்பிக்கையூட்டுகிறார். எனவே, அடுத்த ஆட்டத்துக்கு அதிமுக தயாராகும் என்றே தெரிகிறது.பலமான, தொண்டர்கள் எதிர்பார்க்கும் ஒற்றை தலைமையுடன் கட்சி இயங்க வாய்ப்பிருக்கிறது என்பதே இப்போதைய நிலை.