கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பின்னலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், பின்னலூர் டாஸ்மார்க் கடையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சுவற்றில் துளைபோட்டு உள்ளே
10 அட்டை பெட்டிகளில் இருந்த 480 உயர் ரக மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். இதனுடைய மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
தகவலின்பேரில் விரைந்து வந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம், காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் உள்ளிட்ட குழுவினர் சம்பவம் நடைபெற்ற டாஸ்மார்க் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சுவரை துளை போட பயன்படுத்திய சுத்தியல், கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் அவ்விடத்திலேயே போட்டுச் சென்றது தெரியவந்தது.
டாஸ்மார்க் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்த தவக்களை என்கிற குமாரை பிடித்து விசாரணை செய்தும் வருகிறார்கள்.














