கொரோனாவால் அனாதையான குழந்தைகள்

0
841

கொரோனா என்னும் கொடிய வைரசால் ஆதரவாக இருந்த தாயை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் மூன்று சிறுவர்களுக்கு அரசு உதவவேண்டும் என உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அடுத்து அமைந்திருக்கும் சிறிய கிராமம் துத்திகுளம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெபம் மாணிக்கராஜ் , ஞானம் மரிய செல்வி தம்பதியினருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஸ்டீபன் ராஜ், தர்மராஜ், செல்வின் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். ஜெபம் மாணிக்கராஜ் ஓட்டுநராக பணியாற்றி கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்திருக்கின்றனர். இந்தநிலையில் 2015ஆம் ஆண்டு ஜெபம் மாணிக்கராஜ் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்து விட, குடும்பம் நிலைகுலைந்து போனது.

செய்வதறியாது மூன்று மகன்களுடன் ஞான மரிய செல்வி பரிதவித்த நிலையில், கணவனை இழந்த கைம்பெண் என்ற வகையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடியில் பணியாளராக சேர்க்கப்பட்டார். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து தனது மூன்று மகன்களை படிக்க வைத்தார்.

இந்நிலையில் அந்த அற்ப, சொற்ப மகிழ்ச்சிக்கும் உலை வைத்தது கொரோனா வைரஸ். கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்த ஏழ்மையான குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை மூன்று மகன்களை அன்பாக கவனித்து வந்த ஞான மரிய செல்வி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலனற்ற நிலையில் அவர் உயிர் இழந்து விட, மூன்று சிறுவர்களும் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். .இந்த இளம் சிறுவர்களுக்கு அரசு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here