கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு தளர்வுகள் எதுவும் இன்றி நாளை முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு கடுமையான ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை தவிர்த்து மற்ற எந்த கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் இறப்பு சம்பந்தமான நிகழ்வுகளுக்கு மட்டுமே இ- அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 24,26,28 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வின் போது நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது, நேற்றைய தினம் மாலை 4 மணி முதல் அனைத்து கடைகளும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்றைய தினம் மாற்றியமைக்கப்பட்ட திருமணத்துக்கு தேவையான பொருட்களை உறவினர்கள் வாங்கத் தொடங்கினர்.

பட்டுப் புடவைகள் பலசரக்கு பொருட்கள் உள்ளிட்டவைகளை நேற்றைய தினமே உறவினர்களால் வாங்கப்பட்டு இன்றைய தினம் காலை முதலே திருமணங்கள் வேகவேகமாக நடைபெற்றன . நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் – முத்துலட்சுமி தம்பதிகளின் மகள் சத்தியகுமாரியின் திருமணம் திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் மணமகன், மணமகள் வீட்டார் 10 நபர்களை வைத்து நடைபெற்றது. இதுபோன்று மாவட்டம் மற்றும் மாநகர் பகுதியில் ஏராளமான திருமணங்கள் குறிப்பிட்ட தேதியில் இருந்து முன்கூட்டியே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது








