சென்னையில் ரெம்டிசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்ற குற்றவாளிகளின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஒரு லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக காவலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(23). இவர் தன்னுடைய கூட்டாளியான மணி என்பவருடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விடுதியில் தங்கி ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பாலகிருஷ்ணனின் நண்பரான புரசைவக்கத்தை சேர்ந்த முகமது இர்பான் என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் தாயிரா மெடிக்கல்ஸ் எனும் மருந்து விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த மூன்று பேரும், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கலீல்(35), முகமது ஜாவித்(23), மற்றும் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஆரிஃப் உசேன் ஆகியோருடன் சேர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ரெம்டிசிவர் மருந்தைக் கைப்பற்றி தாயிரா மெடிக்கலில் வைத்து கள்ளசந்தையில் விற்பனை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணனின் தனிப்படையினர் மணியைத் தவிர மீதமுள்ள 5 பேரையும் கைது செய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள மணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி தனிப்படை உதவி ஆய்வாளர், காவலர் ஒருவருடன் சேர்ந்து சுமார் 1 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.














