கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகத்தை தடுக்க தமிழக அரசு இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதில் மளிகை கடை, காய்கறி கடை மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுமே மதியம் 12 மணி வரை திறந்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வாரச்சந்தைகள் தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சந்தையில் செய்துங்கநல்லூரைச் சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் சந்தையில் வந்து பொருட்கள் வாங்கிச் செல்வார்கள்.
தற்போது முழு ஊரடங்குக்கிடையே இந்த வாரச்சந்தை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக வியாபாரிகள் காலை முதலே திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருட்கள் வாங்க வந்தவர்களில் ஏராளமானோர் சமூக இடைவெளிகளை மறந்து பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். பலர் முகக்கவசம் இன்றி வந்து பொருட்களை வாங்குகின்றனர். சில வியாபாரிகள் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் முன்னேற்பாடும் இன்றி இன்றி பொருட்களை விற்பனை செய்கின்றனர். கொரோனா தொற்று பாதிப்பு அபாயம் இருந்தும், மிக அருகிலேயே உள்ள செய்துங்கநல்லூர் போலீசார் இதனை கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.