போலீஸ் துணையுடன் குளத்துக்குள் கழிவுத்தொட்டி : பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

0
364

உள்ளாட்சி அமைப்புகளால் தமிழகத்தில் நாசமாக்கப்படும் நீர் நிலைகள் அதிகம். நெல்லை மாநகராட்சி தாமிரபரணியை மாசுபடுத்துவது போல், களக்காடு நகராட்சியும் அங்குள்ள நீர் நிலைகளை அசுத்தப்படுத்த தீவிரமாக முயல்கிறது.

களக்காடு நகரத்திற்கே முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகின்ற உப்பாறு, குடிதாங்கி குளம், மாணிக்கம் குளங்களில் ஏற்கனவே குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கின்றன. நீர் நிலைகளை மேலும் மோசமாக்கும் நோக்கத்துடன் களக்காடு நகராட்சி சார்பில் உப்பாற்றிலும், குடிதாங்கி, மாணிக்கம் குளங்களிலும் கழிவுநீர் தொட்டியும் கழிவுநீர் சுத்தி கரிப்பு தொட்டியும் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், பொதுமக்கள் ஆதரவுடன் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் இணைந்து அதை தடுத்தன. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏற்கனவே, குடிதாங்கி குளத்தை சாலைகள், கட்டுமானங்கள் மூலம் சுருக்க முயற்சித்த போது, நீதிமன்றத்தின் மூலம், நீர் நிலையின் அளவை குறைக்காமல் தான் நகராட்சி சீரமைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

அதையும் மீறி களக்காடு நகராட்சி மீண்டும் மீண்டும் கட்டுமான முயற்சிகளை மேற்கொள்ள முயல்கிறது. ஜனநாயக ரீதியில் போராடிய மக்களை காவல்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியது. தற்போது இன்று காலை போலீஸ் உதவியுடன் நீதிமன்ற உத்தரவை மீறி நீர் நிலைகளில் கழிவுநீர் தொட்டி அமைக்கப் போவதாக தகவல் கிடைத்ததையடுத்து, அனைத்துக் கட்சிகள் மக்கள் அமைப்புகளை சார்ந்தவர்கள் போராடும் முடிவில் உள்ளனர்.

இதுகுறித்து பேசிய போராட்ட குழுத் தலைவர் சித்திக் அஸி சூர் ரஹ்மான், ” ஆக்கிரமிப்பு மற்றும் கழிவு நீர் கட்டுமானங்கள் மூலம் களக்காட்டின் உயிர் ஆதாரமான நீராதாரத்தை அழிக்க நகராட்சி திட்டமிடுகிறது. இதை நாங்கள் அனுமதிக்க போவதில்லை” என்றார்.

தென் மாவட்டங்களின் நீர்நிலை பாதுகாவல் அமைப்பாக செயல்படும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கமும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து களக்காடு மக்களுடன் களம் இறங்குவோம் என்று அறிவித்துள்ளது. ” எந்த விலை கொடுத்தேனும், இயற்கை வளங்களை, நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் நாசகார செயல்களை எதிர்த்து தடுக்க வேண்டும்” என்று அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் எழுத்தாளர் அய்கோ தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளையும், நீர் சட்டத்தையும் மீறும் வகையில், பொது மக்களிடம் எவ்வித கலந்தாய்வும் செய்யாமல், மக்களுக்கு உரிமையான பொதுச் சொத்தான குளங்களையும் ஆற்றையும் சூறையாடும் செயலை களக்காடு நகராட்சி நிறுத்திக்கொண்டால் நல்லது என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here