நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு வாகைக்குளத்தை சேர்ந்த பாபநாசம் மகன் முத்து மனோ (27). களக்காடு பகுதியில் காதல் தகராறு தொடர்பாக பள்ளி மாணவரை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொரு வழக்கிலும் நெல்லையில் ஆஜர்படுத்தவேண்டிய நிலையில் பாளை மத்திய சிறைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு இவருக்கும் தென்கலத்தை சேர்ந்த தங்கம் (28) என்பவருக்கும் செல்லுக்கு வெளியே தகராறு ஏற்பட்டது. தங்கத்துடன் மேலும் சில கைதிகள் சேர்ந்து முத்து மனோவை தாக்கியதாக கூறப்படுகிறது, கல், கம்பு, கட்டையால் தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது.
அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.