பொருநை இலக்கிய விழா: அனைத்து எழுத்தாளர்களையும் அழைத்து நடத்த கலெக்டருக்கு கோரிக்கை

0
322

நெல்லையைச் சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அய்கோ நெல்லை கலெக்டர் விஷ்ணுவிடம் ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது :

நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, குமரி மாவட்ட எழுத்தாளர்கள் பங்கேற்கும் பொருநை இலக்கிய விழா நடத்தப் போவதாக அறிவித்துள்ளீர்கள். நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் அந்த அறிவிப்பும் சில பத்திரிகைகளில் தனிநபர் ஒருவர் அழைப்பதாகவே வந்தது.

இதுகுறித்து காலையில் தங்களிடம் முறையிட முயன்றோம். முடியாததால் பொறுப்பு தாசில்தாரிடம் புகார் தெரிவித்தோம்.

தங்களால் தன்னிச்சையாக, எவ்வித வரையறையும் இன்றி அமைக்கப்பட்ட ஐந்து குழுக்களில் இடம்பெற்று இருந்த ஒருவரிடமும் கோரிக்கையை வலியுறுத்தினோம்

நிகழ்ச்சி பொறுப்பு தாசில்தார் செல்வம், சென்னையில் இருந்தே குழு உறுப்பினர்கள், பங்கேற்கும் எழுத்தாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். முதல்வர், தலைமைச் செயலர் என எவர் மூலம் அப்பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன என்பதை அறிய ஆசைப்படுகிறோம்.

அவ்வாறே அறிவித்திருந்தாலும், நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் பேரில் நடத்துவதால் அனைத்து எழுத்தாளர்களையும் அழைப்பது தங்கள் பொறுப்பு தான்.

எனவே, பெரிதும் மக்கள் வரிப்பணத்திலும், ஸ்பான்சர் மூலமும் செலவு செய்யப்படும் இந்த நிகழ்ச்சி குறித்து வெளிப்படையான அறிவிப்பும், தகுந்த நபர் தேர்வும் அவசியம்.

குறிப்பாக, பொருநை சார்ந்த செயல்பாடு, படைப்புகளை மேற்கொண்ட எம்மை போன்ற பல எழுத்தாளர்கள் இந்த நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். பெரிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களும் மறக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, விழாவுக்கு உரிய நான்கு மாவட்டங்களில் தூத்துக்குடி, குமரி மாவட்ட எழுத்தாளர்கள் இல்லை.

எனவே, தாங்கள் 26, 27ஆம் தேதிகளில் நடத்தவிருக்கும் பொருநை இலக்கிய விழாவை ரத்து செய்து, பொது அறிவிப்பு கொடுத்து நான்கு மாவட்ட எழுத்தாளர்களையும் அழைத்து, முறையான குழு அமைத்து இன்னொரு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்து இருந்தார்.

அவரது கருத்தை வலியுறுத்தி குமரி மாவட்ட எழுத்தாளர்கள் திருத்தமிழ்த்தேவனார், தக்கலை கென்னடி, தூத்துக்குடி எழுத்தாளர் நெய்தல் அண்டோ உள்ளிட்ட எழுத்தாளர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான தாசில்தார் செல்வத்திடம் பேசினர் மாவட்ட நிர்வாகத்தின் பதிலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here