சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று சாத்தான்குளம் கொட்டடி கொலை வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
கோவில்பட்டி நீதித்துறை நடுவர் விசாரணைக்கு இடையூறு செய்த தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் துணை கண்காணிப்பாளர் பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோர் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூராய்வு அறிக்கை, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனின் அறிக்கை மற்றும் சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதியின் வாக்குமூலங்களை கவனமாக படித்தனர். இறுதியாக அவர்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி கோவில்பட்டி நீதித்துறை நடுவர் அறிக்கையில் சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதி நடந்ததை கூறியதை குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் துணை கண்காணிப்பாளர் பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோரின் விசாரணையை சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சியையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே நாங்கள் அவர்கள் மீது சூமோட்டாவாக குற்றவியல் விசாரணையை நடத்த ஒரு வழக்கை பதிவு செய்கிறோம். இன்று நாங்கள் பிரவின் குமார் அபிநபு ஐபிஎஸ்சிடம் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் அறிக்கை, உடற்கூறாய்வு அறிக்கையை வழங்குகிறோம். அதேபோல், தலைமை காவலர் ரேவதியின் வாக்குமூலத்தை அபிநபு ஐபிஎஸ்சிடம் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் வழங்கவேண்டும்.
முன் உடல் ஆய்வு அறிக்கைப்படி இறந்தோர் உடல்களில் காணப்பட்ட பலத்த காயங்கள், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் அறிக்கை குறிப்பாக தலைமை காவலர் ரேவதி வாக்குமூலம் ஆகியனவே இ.த.ச.302 படி வழக்குப்பதிவு செய்யப் போதுமானதென நாங்கள் கருதுகிறோம்.
தமிழ்நாடு தடயவியல் இயக்குநர் இந்த வழக்கு தொடர்பான சோதனைக்கு முன்னுரிமை கொடுத்து விரைந்து முடிவை தெரிவிக்கவேண்டும்.
நீதிமன்றம் ஒரு கருத்துருக்குள் வருவதற்கு ஏன் அதிக காலம் எடுத்துக்கொள்கிறது என்று ஒருவர் வியக்கலாம். பொது சமூக உள்ளுணர்வு நீதிமன்ற உத்தரவுக்கு அளவுகோலாக இருக்க முடியாது. ஏனெனில், பொது சமூக பிரக்ஞை குறுகியது. ஆனால், நீதிமன்ற உத்தரவு குறிப்பாக உயர்நீதிமன்ற உத்தரவு, நீதிமன்ற ஆவணமாக எப்போதும் உயிர்ப்பாக இருக்கக்கூடியது.
ரோமானிய கவர்னர் பிலாத்து பொது விசாரணையில், பொது ஜனங்களின் கூச்சலால் ஏசுவிற்கு தீர்ப்பு விதித்து கைகழுவினார். நாங்கள் அப்படி விடமுடியாது. நாங்கள் வலுவான ஆதாரங்கள் இன்றி கையறு நிலையில் இல்லை. கைநிறைய முகாந்திரங்களை வைத்திருக்கிறோம்.
டிஎஸ்பி அனில்குமார் தமது மனக்கண்ணை இறந்த இருவரது குடும்பத்தாரின் கண்களில் இருந்து பெருகும் கண்ணீர் நதியின் மீது வைத்து, அதை துடைக்கும் வகையில் விசாரணையை நடத்துவார் என நாங்கள் மிக உறுதியாக நம்புகிறோம். மேலும், நாங்கள் மிகவும் அணுக்கமாக வழக்கை கண்காணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் அவர் மனதில் கொள்ளவேண்டும்.
அரசு எந்த நேரத்திலும் சிபிஐ விசாரணைக்கு கொண்டுசெல்ல எல்லாம் திறந்த நிலையில் உள்ளது.
நேற்றைய எங்கள் உத்தரவுக்கேற்ப சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு முதுநிலை வருவாய் அதிகாரிகளை நியமித்த தூத்துக்குடி கலெக்டரை பாராட்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.













