‘தாமிரபரணியில் மணல் அள்ளக் கூடாது’ என வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி பைக் பேரணி நடக்கிறது.
கொரோனா காலத்தில் குறைந்திருந்த மணல் திருட்டு, தாமிரபரணியில் இப்பொழுது அதிகரித்துவிட்டது. போதாக்குறைக்கு ஓரிரு இடங்களில் பாரியை திறக்கவும் அரசு உத்தேசத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக முக்காணியின் அதற்கான அளவீடு நடந்த நிலையில், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் தடை கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையை நாடினர். அரசு சார்பில் மணல் குவாரி திறக்கும் உத்தேசம் இல்லை என்று பதில் வந்தது.

ஆனாலும் முக்காணி மற்றும் கொங்கராயகுறிச்சி பகுதிகளை சுற்றி வருவாய்துறை வட்டம் அடிக்கிறது. ஏற்கனவே 2010 ல் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் நிலையில், மணல் இல்லாமல் வாடிக் கிடக்கும் நதியில் குவாரி திறக்கக் கூடாது என்று மக்கள் உறுதியாக உள்ளனர.
இந்நிலையில், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை டி.எஸ். எஸ். எஸ். வளாகத்தில் பொதுச்செயலாளர் அய்கோ தலைமையில் நடந்தது. துணைத் தலைவி விஜயா, நிர்வாக குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ஜெயபாலன் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உமா வரவேற்றார்.

கூட்டத்தில் அருட்தந்தையர்கள் போஸ்கோ, மை பா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வக்கீல் முத்துப்பாண்டி, பால் அண்ணாதுரை, நம்பிராஜன் ஆகியோர் பேசினர். அருணகிரி, அருள்ராஜ், செல்வி, முத்து பாப்பா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் வரும் 26-ஆம் தேதி தாமிரபரணியில் மணல் அள்ளக் கூடாது என்று வலியுறுத்தி பாபநாசம் முதல் தூத்துக்குடி வரை இருசக்கர பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியாளர்களிடம் மனு அளிப்பது, தொடர்ந்து 15 நாட்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்துவது, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாடுகளை சித்தரிக்கும் 12 ஆவது ஆண்டு மலர் வெளியிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிலுவை பிரகாசம் நன்றி கூறினார்.