வருவாய் துறை உதவியுடன் பனைகள் வெட்டி கடத்தல்

0
1628


தென்காசி – பாபநாசம் சாலையில் மேல ஆம்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட தாட்டான்பட்டி பிள்ளைகுளத்தின் அருகே உள்ள ஓடைக்கரையிலும், பட்டா நிலத்திலும் நின்றிருந்த நூற்றுக்கு மேற்பட்ட பனைகளை வெட்டிக்கடத்தி உள்ளனர் .

இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்த போது வருவாய் துறை அலுவலர்கள் சிலர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
நூற்றாண்டுக்கு மேல் வாழ்ந்து அடிமுதல் நுனிவரை மனிதர்களுக்கு பயன்படும் பனை தமிழக அரசின் சின்னமாகும். குளக்கரை தரிசு நிலங்களில் பனையை வளர்க்க அரசு பரிந்துரைத்து வரும் நிலையில், வளர்ந்த, முழுப்பயன் தரும் நிலையில் இருந்த பச்சை பனை மரங்களை வெட்டியது சட்ட விரோதம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மழை பொழிவுக்கு காரணமாவதோடு, அந்த மழை நீரை சேமிக்கும் தன்மை கொண்ட பனையை செங்கல் சூளைகளில் எரிப்பதற்காக எந்திரம் மூலம் அவசர, அவசரமாக வெட்டி வீழ்த்தியுள்ளனர்.
சம்பவ இடத்தை பனை வாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் தலைமையில் இளைய பாரதம் அமைப்பு தலைவர் வெங்கடேஷ், ப்ரானா மரம் வளர் அமைப்பு தலைவர் சீனிவாசன், நதிகள் பாதுகாப்பு இயக்க தலைவர் ரவீந்திரன், தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் இயக்க நிர்வாகி செல்வின் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து பனை வாழ்வியல் இயக்க தலைவர் ஜான் பீட்டர் கூறுகையில், ‘ இதுகுறித்து கிரமா நிர்வாக அலுவலரிடம் கேட்ட போது, பட்டா நிலத்தில் வெட்ட அனுமதி கேட்டார்கள், கொடுத்தோம் என்று பொறுப்பில்லமல் பதில் சொல்கிறார்கள்.
ஏற்கனவே பனைகளை வெட்டினால் தண்டனை என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பனைகளை தறித்தவர்கள் மீதும், ஒப்புதல் அளித்த அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here