தனியார் வணிக வளாகத்துக்காக நெடுஞ்சாலை மரங்கள் வெட்டி சாய்ப்பு -பாளை.யில் பசுமைக் கொலை

0
1246

திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில்
புதிதாக கட்டப்படவிருக்கும் தனியார் வணிக வளாகத்திற்காக 30 வருடம் பழமையான பசுமை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. உரிய அனுமதி இன்றி வெட்டப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்…

திருநெல்வேலி திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் பள்ளியின் எதிர்ப்புறம் புதிதாக அமைய இருக்கும் தனியார் வணிக வளாகத்திற்காக 30 வருடங்களுக்கு மேல் பசுமை போர்வையாக வளர்ந்து இருந்த மரங்கள் வெட்டப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அங்கு வளர்ந்து நின்ற குறிப்பிட்ட மரத்தை வெட்டுவதற்கு அனுமதி பெறாமல் இருந்ததை சுட்டிக்காட்டியதால் மற்ற மரங்களுக்கும் சேர்த்து அனுமதி வாங்கி அதிகாலையிலேயே மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட கொடூரம் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.

திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் புதிதாக வணிக வளாகம் திறக்கப்பட இருப்பதாகவும் அந்த மாலின் புற அழகை மறைக்கும் விதமாக மரங்கள் வளர்ந்து இருப்பதாகவும் எனவே அதனை அகற்றும் முயற்சியில் நேற்று அதிகாலை சில மர்ம நபர்கள் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து அந்த பகுதியின் சமூக ஆர்வலர் மணி என்பவர் உடனடியாக சென்று இதுகுறித்து கேட்டதும் மரத்தினை அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறையின் ஆணையை காண்பிக்குமாறு கூறியதாகவும் அதனை அடுத்து ஆணை இருக்கிறது உதவி பொறியாளர் தங்களிடம் காண்பிப்பார் என மரத்தினை வெட்டியவர்கள் கூறிவிட்டு கிளம்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தனியார் வணிக வளாகத்திற்கு முன்பாக உள்ள மரத்தினை வெட்டுவதற்கு ஆணைகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், அதற்கு அடுத்தாற் போல் இருக்கும் சில மரங்களை வெட்டுவதற்கான ஆணையை தயார் செய்து பின்னர் இரவோடு இரவாக நான்கு மரங்களையும் சேர்த்து வெட்டியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மீண்டும் தகவல் அறிந்த சமூக ஆர்வலர் மணி, அதுகுறித்து கேட்டதாகவும் அதற்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கிறார்.

இயற்கை சமநிலையை பேணாததால் சுற்றுச்சூழல் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு இருப்பது பல்வேறு செய்திகள் மூலம் வெளியே வரும் நிலையில் திருநெல்வேலி தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நான்கு பசுமை மரங்கள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பாளையங்கோட்டையில் இயற்கை ஆர்வலர்களிடையே மிகப்பெரிய பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here