கொரோனாவை பரப்பிய 108 அதிகாரிகள்

0
1485

அவசர உதவிக்கான 108 ஆம்புலன்சை அவசர நோய்க்கான வாகனமாக மாற்றுகின்றனர் அதன் அதிகாரிகள்.
புளியங்குடி அரசு மருத்துவமனையிலிருந்து பாளை மேட்டுத்திடல் மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்ல நேற்று காலை சங்கரன்கோவில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் வந்தது. அங்கு சென்றபின்பு தான் நோய்பட்டவருக்கு கொரோனா தொற்று சந்தேகம் இருந்தது தெரியவந்தது.
கொரோனாவுக்காகவே மாவட்டத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் பிரத்யேகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு சாதனங்கள், உபகரணங்கள் இல்லாத தங்களை அழைத்ததால், அவசர மருத்துவ நிர்வாகியிடம் முறையிட்டுள்ளனர் ஊழியர்கள்.
ஆனால், அவரோ மருத்துவ அலுவலர் பேச்சை கேட்கும்படி கூறியுள்ளார். பாதுகாப்பு உபகரணங்களுக்காவது ஏற்பாடு செய்யுமாறு கோரியும், அதை மருத்துவ அலுவலரோ, அவசர மருத்துவ நிர்வாகியோ கண்டுகொள்ளவில்லையாம். மாவட்ட 108 மேலாளரை தொடர்பு கொன்டதற்கும் அழைப்பை ஏற்காததால், வேறு வழியின்றி பாளை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இந்நிலையில், கொண்டு சென்ற நோயாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ நுட்புநரான பெண்ணையும் அவசரமாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
எவ்வித பாதுகாப்பு வசதியும் செய்து கொடுக்காமல் தங்கள் ஊழியர்களை அனுப்பி கொரோனா தொற்று ஏற்பட அதிகாரிகளே காரணமாகிவிட்டதாக மற்ற ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக பணி செய்யுமாவட்டத்தில் இருந்து சொந்த மாவட்டத்துக்கு வந்தவர்களை, அங்கேயே தேவைக்கேற்ப தற்காலிகமாக பணியில் அமர்த்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் அவ்வாறு 6 ஓட்டுநர்கள் இருந்தும், ‘ஓட்டுநர் இல்லை’ என்று நொண்டி சாக்கு கூறி கொரோனா அவசர ஊர்தியை நிறுத்தி வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதுகூட பரவாயில்லை, கொரோனா நோயாளியை ஏற்றிச்சென்ற 108 ஆம்புலன்சில் அதற்கு பிறகு பிரசவத்துக்காக இரு பெண்களை ஏற்றி சென்றுள்ளனர். அவர்கள் பாடு என்ன என்பதும், அதற்கும் 108 ஆம்புலன்ஸ் அதிகாரி தானே பொறுப்பு என்பதும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here