திருடிய பைக்கை உரிமையாளரிடமே விற்க முயற்சி: தூத்துக்குடி வாலிபர்கள் கைது

0
1410

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (23). வீட்டு முன்பு நிறுத்தியிருந்த அவரது பைக் சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. இது குறித்து வடபாகம் போலீசில் புகார் அளித்ததோடு, வேலைக்கு தேவை என்பதால் பழைய பைக் வாங்குவதற்காக இணையத்தில் தேடியுள்ளார்.
அப்போது ஓஎல்எக்ஸ் தளத்தில் ஒரு பைக் விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. நன்றாக கூர்ந்து பார்த்தபோது அது சாட்சாத் தனது பைக் என்று தெரிந்தது. உடனடியாக விற்பனைக்கு பதிவு செய்த நபரை தொடர்பு கொண்டு வாங்குவது போல் விபரங்களை கேட்டுள்ளார். அவர் தூத்துக்குடி கால்டுவெல் காலனிக்கு வரும்படி கூறியுள்ளார்.
அவ்வாறே கால்டுவெல் காலனிக்கு சென்று தனது பைக் தான் என்று உறுதிபடுத்திக் கொண்ட ராம்குமார், பணத்தை எடுத்து வருவதாக கூறிச்சென்று போலீசாரிடம் விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து சாதாரண உடையில் அவருடன் சென்ற போலீசார் பைக்கை விற்க வந்திருந்த பண்டாரம்பட்டி கருவேலன் மகன் சந்தோஷை (23) கையும் களவுமாக பிடித்தனர். அவர் கூறிய தகவல் படி கால்டுவெல் காலனி துரைப்பாண்டி மகன் மணி (23), ஆசிரியர் காலனி துரை மகன் சரவணன் (22) ஆகியோரையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here