கோவை மேட்டுப்பாளையம் நடூர் அருந்ததியர் குடியிருப்பையொட்டி 20 அடியில் எழுப்பப்பட்ட துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் மடிந்தனர். சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, தகுந்தவர்களுக்கு வேலை என முதல்வர் அறிவித்தாலும், சில நாட்களுக்கு முன்பு ஆட்சியரிடம் சுவர் குறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததே இந்த விபரீத விபத்துக்கு காரணம் என்பதால் வட்டார மக்கள் வருத்தத்தில் உள்ளனர். முக்கியமான பிரச்சினைக்காக அளிக்கப்படும் மனுவை அலட்சியம் செய்யும் அதிகாரிகளும் அந்த பிரச்சினையின் காரணகர்த்தாக்களாக கருதப்படவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
அரசு அதிகாரியின் அலட்சியத்தால் 17 உயிர்கள் பறிபோன சம்பவத்திலுல், கண்களை நனைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஏற்கனவே தனது மனைவியை சாகக் கொடுத்த தேநீர்க்கடை ஊழியர் செல்வராஜ், இந்த சுவர் மரணத்துக்கு தனது இரு பிள்ளைகளையும் இழந்து அனாதையாகிவிட்டார்.
பிள்ளைகளும் வளர்ந்து ஆளாகி, 10ஆம் வகுப்பு படித்த மகன் ராமநாதன், கல்லூரி சென்ற நிவேதிதா ஆகியோர் ஆவர். வளர்ந்து தன்னை பாதுகாப்பார்கள் என்று கருதிய இரு பிள்ளைகளையும் இழந்தாலும், மனதை தேற்றிக்கொண்டு அவர்கள் இருவரின் கண்களையும் உடனடியாக செல்வராஜ் தானம் அளித்துள்ளார். தேற்ற முடியாத துயரத்துக்கிடையே செல்வராஜ் செய்த தானத்தை அப்பகுதி மக்கள் பெருமையாக பேசிவருகின்றனர்.