.
தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற மதுரை உயர்நீதிமன்ற பெஞ்சில் மனு செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் மோசடி செய்ததற்கான ஆதாரம் உள்ளதாக கூறப்பட்டது.
அதேவேளையில் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிய காரணமாக இருந்த புகார்தாரர் தலையீட்டு மனு (Intervention petition) தாக்கல் செய்தார். புகார்தாரர் சார்பில் வழக்கறிஞர் ஹெரால்டு சிங் ஆஜரானார். புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹெரால்டு சிங் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனடிப்படையில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் வரை போலீசார் கைது செய்ய தடை விதிக்கும்படி கேட்டும் உயர்நீதிமன்றம் மறுத்தது. இந்நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.














