சென்னை ஐஐடி வளாகத்தில் கேரள மாணவி ஃபாத்திமா லத்திப் மர்ம மரணம் அடைந்துள்ளார். மன அழுத்தத்தால் தற்கொலை செய்தார் என்று ஐஐடி நிர்வாகம் கூறி வந்த நிலையில், ஃபாத்திமா லத்திப்பின் கைபேசி குறுஞ்செய்தி மூலம் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் அளித்த மன நெருக்கடியால் இறந்திருக்க மூடும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், மாநகர காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் விசாரித்துவிட்டு மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கை மாற்ற ஏற்பாடு செய்துள்ளார். வட மாநிலத்தில் இடம் கிடைத்த நிலையில், தமிழகத்தில் என்றால் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்னையில் சேர்த்ததாக ஃபாத்திமா லத்திப்பின் தாய் கூறிய செய்தி அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், இதையெல்லாம் சட்டை செய்யாமல் எங்கோ வேறு மாநிலத்தில் துர்சம்பவம் நடந்ததுபோல் அதிமேதாவி அமைச்சர்கள் குற்ற உணர்வில்லாமல் உலவுகின்றனர். அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஒரு படி மேலே சென்று வழக்கின் தன்மையை கெடுப்பதுபோலும், விசாரணை நோக்கத்தை திசை திருப்பும் வகையிலும், ஏதோ மன அழுத்தத்தால் மாணவி உயிர் துறந்ததாக காட்டிக்கொள்ளும் பாங்கில் , ‘ மன அழுத்தத்தை போக்க யோகா செய்யவேண்டும்’ என்று அறிவுரையை அள்ளித்தெளித்துள்ளார். அத்துடன் தான் சமூக அறிவியல் படித்தவர் என்றும் பீற்றிக்கொண்டுள்ளார்.
துயர நிகழ்வு நடந்தது தமிழகத்தில். இதற்கு நீதி வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்பதை மறைக்கும் வகையில் பெரிய தனக்காரர் தோரணையில் அமைச்சர்கள் பேசுவது தவறு.
சென்னை ஐஐடியில் சாதி, மத பேத சூழல் நிலவுகிறது. வைதீக மனப்பான்மை கொண்ட சுதர்சன் பத்மநாபன் போன்ற பேராசிரியர்கள் வட மாநிலங்களை போன்று தமிழகத்தையும் மாற்ற நினைக்கிறார்கள் என அங்கு பயின்ற பல மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஐஐடி வளாகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 4 தற்கொலை நிகழ்வுகள் நடந்துள்ளன. 10 ஆண்டுகளில் 14 பேர் மர்மமாக இறந்துள்ளனர்.
எனவே, மாணவியின் மரணம் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழ்நாட்டின் தனித்துவமான மதநல்லிணக்கத்துக்கு மாறான பாதகம் என்ற முறையில் இதை கூடுதல் கவனத்துடன் அணுகவேண்டியது அரசின் கடமை.











