வார்த்தையாகவே வடிந்துபோகுமா திமுகவின் மாநில சுயாட்சி தீர்மானங்கள்?

0
815

திமுக பொதுக்குழு கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது, துரைமுருகன், பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், நேரு உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டாலும், மாநில சுயாட்சி குறித்தே பெரும்பாலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலங்களின் நிர்வாகம், நிதி, கல்வி, தொழில், வேலை வாய்ப்பு என அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு தலையீடு இருக்கும் நிலையில், இக்கூட்டத்தின் மாநில சுயாட்சி தீர்மானங்கள் பிற கட்சியினரை சற்று நிமிர்ந்து பார்க்கச்செய்துள்ளது.
தீர்மானங்களை விளக்கி ஸ்டாலின் பேசியபோது, ‘ அரசியல் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும். இந்தியா முழுவதையும் ஒரே நிர்வாகத்தில் கொண்டுவரும் முயற்சியை கைவிடவேண்டும். நிதி, கல்வி, மானியம், கடன் வழங்குதல் ஆகியவற்றில் மத்திய அரசு கடைப்பிடிக்கும் பெரியண்ணன் மனநிலையை மாற்றவேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற பிரிவை ஏற்படுத்தி இட ஒதுக்கீட்டு கொள்கைகளை நீர்த்துப்போகச்செய்யும் சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
தனித்தனி தேசிய இனங்களாகவே மாநிலங்கள் உள்ள நிலையில், அவற்றின் மொழி, கலாச்சாரம், இருப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சட்டத்திருத்தங்களை செய்துவருகிறது. அதை கண்டிக்கும் விதமாக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியின் தீர்மானங்கள் உள்ளன.
ஆனால், இத்தகைய தீர்மானங்களை உள்ளாட்சி நெருங்கும் இத்தருணத்தில் இயற்றிய கட்சி, அதை நிறைவேற்ற சட்ட, சனநாயக போராட்டம் மூலம் வலியுறுத்துமா, அல்லது ‘கிடப்பது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மனையில் வை’ என்பதுபோல் உள்ளாட்சி தேர்தலை கவனிக்கப் போய்விடுமா? பட ரிலீஸ் சமயத்தில் அரசியல் கருத்துக்களை அள்ளிவிட்டு ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தும் நடிகர்கள் போல், உள்ளாட்சி தேர்தலுக்கு உற்சாகம் அளிக்கும் டானிக்காக இந்த தீர்மானங்களை திமுக பயன்படுத்துமா, இல்லை உயிராதாரமாக கருதி போராடுமா என்பதை பொறுத்தே திமுகவின்பால் இளைஞர்கள் ஈர்க்கப்படும் வேகம் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here