அரசியல் என்றாலே பொதுத்தொண்டுதான். ஆனால், சேவை செய்யவே பிறவியெடுத்ததாக பெருமை பேசிக்கொண்டு கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கும் அரசியல்வாதிகளைப்போல், பிறவிக்கடைத்தேற்றத்துக்கு மார்க்கம் சொல்வதாக கூறி, பினாமி சொத்துக்கள், அடியாள் கும்பலுடன் ஆன்மீக சாமியார்களும் வலம் வருகின்றனர்.
தமிழ்நாட்டு பிரேமானந்தா முதல் வடநாட்டு பாபா வரை பலரது விவகாரங்கள் இப்படித்தான் வெளிச்சத்துக்கு வந்தன. ஆனாலும், இயற்கை வளங்களை சூறையாடி ஆசிரமங்கள் அமைப்பது, ஆன்மீகம் அல்லாத சேவைகளை காட்டி கருப்பை வெள்ளையாக்குவது போன்ற கில்லாடி கில்மா வேலைகளை இன்னமும் செய்துகொண்டேயிருக்கின்றனர்.
ஆண்டவன் புண்ணியத்தில் அருள்வாக்கு கொடுப்பதாக கூறினாலும், ஆள்பவர்கள் தயவில்தான் இவர்கள் அசட்ட செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். ஆனாலும், அரசியல் காற்று மாறியடிக்கும்போது அந்தரங்கம் அம்பலத்துக்கு வந்துவிடுகிறது.
இப்போது கல்கி பகவானின் சாயம் கலைந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது ஆசிரமங்களில் அதிரடி வருமான வரி சோதனை நடத்தி, கணக்கில் காட்டாத கோடிக்கணக்கான இந்திய, வெளிநாட்டு பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
தமிழகம் மட்டுமில்லாமல் ஆப்ரிக்க நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கியது, சட்டவிரோதமாக முதலீடு செய்தது குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் வெளிநாட்டு பக்தர்களுக்கு போதைப் பொருள்களைக் கொடுத்து ஆபாச செயல்களில் ஈடுபட்டதாகவும், சிறப்பு பூஜை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்ததாகவும் இவர் மீது புகார் எழுந்தது.
ஆந்திர மாநிலத்தைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் இந்த ஸ்ரீ பகவானின் பூர்வாசிரம பெயர் விஜயகுமார். தொழில் எல்.ஐ.சி. ஏஜென்சி. 1949 ஆம் ஆண்டு குடியாத்தம் அருகே உள்ள நத்தம் பகுதியில், ஆந்திராவை பூர்விகமாக கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த விஜயகுமார், சென்னையில் கல்லூரி படிப்பை முடித்து, 1971 ல் எல்.ஐ.சி நிறுவன பணியில் சேர்ந்தார். எல்.ஐ.சி யில் பணியாற்றிய காலங்களில் அவருக்கு தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளுடன் தொடர்பு ஏற்பட்டது. ஜே.கே வின் அனைத்து தியானக் கூட்டங்களுக்கும் சென்றார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தால், ஆந்திராவில் ஜே.கே பவுண்டேஷன் நடத்தும் `ரிஷி வேலி ஸ்கூல் ஆஃப் ஜே.கே. ஃபவுண்டேஷ’னில் ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
சிறிதுகாலம் அதில் பணியாற்றியவர், 1980 களின் மத்தியில் அந்த அறக்கட்டளையில் இருந்து வெளியேறி சொந்த அறக்கட்டளை நிறுவினார். அதன்மூலம் 1984ல் ஜீவாசிரமம் என்ற பள்ளியையும் ஆரம்பித்தார். 1989ல் திடீரென ஒரு நாள் தன்னை ஒரு கடவுளாக பிரகடனப்படுத்தினார் விஜயகுமார். தான் விஷ்ணுவின் அவதாரம் என்றும், தனது பெயர் கல்கி பகவான் என்றும் தன்னை புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.
தொடர்ந்து ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆசிரமம் ஒன்றும் அமைத்து ஆசி வழங்கும் வேலையை தொடங்க, பக்தர்கள் வரிசைகட்டி நின்றனர். விஜயகுமார் கல்கி பகவான் ஆன காரணத்தினால் அவரது மனைவி பத்மாவதி ‘அம்மா பகவான்’ ஆனார். தெய்வ தம்பதியால் தமிழகம், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கப்பட்டன. கல்கி பகவான் மீதான பக்தர்களின் நம்பிக்கை நாளுக்குநாள் வளர்ந்த நிலையில் உலகம் முழுவதும் ஆசிரமங்கள் கிளைவிடத்தொடங்கின. கல்கி பகவானை தரிசிக்க ரூ.50,000, அவரது பாதத்தை கழுவ ரூ.10,000 என அனைத்திற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தீட்சை அடைவதற்கு மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலைக்கு 5,000 ரூபாயும் இரண்டாம் நிலைக்கு 10,000 ரூபாயும் மூன்றாம் நிலைக்கு 21,000 ரூபாயும் வழங்கவேண்டும் எனவும் பணம் வசூலிக்கிறார். 90களில் இவரது ஆண்டு வருவாய் 43,000 ரூபாய். இன்று 1,200 கோடி ரூபாய்.
அவரது மகன் என்.கே.வி கிருஷ்ணா கோடிக்கணக்கான முதலீட்டில் பல தொழில்களை செய்துவருகிறார். இவருக்கு மட்டும் 33 வெளிநாட்டு சொகுசுக்கார்கள் சொந்தமாக உள்ளன. பெரும்பாலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தான் இவரது வாசம். 2012 முதலே வருமானவரித்துறையினர் கிருஷ்ணா மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் 5 ஆயிரம் ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் சொத்துகள், ஒன்னெஸ் பல்கலைக்கழகம் என கல்கி பகவான் ஆசிரமத்திற்கு சொந்தமாக 1000 கோடிக்கு மேல் சொத்து, அவை இல்லாமல் அவரது மகனின் லாஸ் ஏஞ்சல்ஸ் நிறுவனம், பெங்களூரு கட்டுமான நிறுவனம் என பக்தர்களின் நம்பிக்கையால் சேர்ந்துள்ள சொத்துக்கள் குறித்த விவரங்களை தற்போது வருமானவரித்துறையினர் சோதனை மூலம் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.
ஆந்திராவில் உள்ள வரதய்ய பாளையத்தில் தனது ஆசிரமத்தின் தலைமை நிலையத்தை பலநூறு ஏக்கர் பரப்பளவில் கட்டியுள்ளார் கல்கி. ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பல நூறு ஏக்கர் நிலத்தையும், வனத்துறை நிலத்தையும் ‘ஆட்டையைப்’ போட்டதாக புகார் இருக்கிறது.
சாதாரண எல்.ஐ.சி. முகவராக, பள்ளி ஆசிரியராக இருந்த கல்கியை கடவுளின் அவதாரம் என்று ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை. எப்படி தனது ஆன்மீகத்தை சந்தைப்படுத்துவது என்று சிந்தித்து தக்க முடிவெடுத்தார். கிராமங்களில் 10ஆம் வகுப்பு வரை படித்த 125 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்தெடுத்து, வெள்ளை உடுப்பு கொடுத்து விஜயகுமார் நாயுடுவின் மீது கல்கி பகவான் இறங்கி உள்ளார் என்று பிரசாரம் செய்யவைத்தார். மக்கள் காணிக்கை கொடுக்க முன் வந்தனர்.
நாளடைவில் எல்லா சாமியார்களையும் போல இவரே சிலரை தயார் செய்து எனக்கு பகவான் தொட்டதால் புற்றுநோய் அகன்றது, மூளைக்கட்டி சரியானது என்று மேடைகளில் சாட்சியம் சொல்லவைத்தார். ஹ்ரித்திக் ரோஷன், ஷில்பா ஷெட்டி, மனீஷா கொய்ராலா போன்ற நடிக, நடிகைகள் பகவானிடம் வேண்டிக்கொண்ட பிறகு பெரிய பட வாய்ப்புகள் வந்ததாக புளுகித்தள்ளினர்.
தனது களியாட்டங்களுக்காகவே ஒரு ஸ்டூடியோவை உருவாக்கியுள்ளார். 25 வயதுக்கும் குறைவான பெண்களுக்கு மட்டும் அங்கு தீட்சை வழங்கப்படும். இவரது அந்தரங்க உண்மைகள் தெரிந்த பவன், விகாஷ் என்ற இரு நிர்வாகிகள் மர்மமான முறையில் இறந்தனர். விபத்து என்று வழக்கு முடிக்கப்பட்டது.
ஆக, ஆன்மீக மோசடி, கிரிமினல் குற்றக்காட்சிகள் நிறைந்த கல்கி பகவான் பார்ட் 1 முடிந்து, வருமான வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி என்ற 2ஆவது பாகம் தொடங்கியுள்ளது. கர்ப்பகிருகம் பாராத பகவானுக்கு காராகிருகம் வாய்த்தால் நம்பி சீரழிந்த பக்தர்களின் ஜென்மம் சாபல்யமாகும்.