தமிழகத்தில் கோயம்பேட்டிற்கு அடுத்தததாக ஆம்னி பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது நாகர்கோவிலில் மட்டுமே. அதன் பின்பே ஏனைய பகுதிகளில் ஆம்னி பேருந்து நிலையங்கள் உருவானது. அந்த வகையில் சிறப்பு பெற்ற நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தில் திருவனந்தபுரம், மார்த்தாண்டம், களியக்காவிளை, குலசேகரம், கருங்கல், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுமார் 120 ஆம்னி பேருந்துகள் தினமும் இயக்கப்படுகிறது.
சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி, ஹைதராபாத், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் இப்பேருந்துகளையே நம்பி உள்ளனர். இதனால் இங்கு சுமார்31/2 கோடி செலவில் பேருந்து நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. பேருந்துகளிடம் பார்க்கிங் கட்டணமாக ரூ160 வசூலிக்கப்படுகிறது. ஆனால் இவற்றை இங்கு சரிவர பார்க்கிங் செய்ய முடிவதில்லை.புதியதாக கட்டப்பட்ட வணிக வளாகம் சரிவர திட்டமிடப்பட்டு கட்டப்படாததால் பேருந்துகளை இங்கு நிறுத்தாமல் பயணிகளை ஏற்றி அல்லது இறக்கிவிடுவதற்காகவே பேருந்துகள் இங்கு நிற்க முடியும் அவலநிலை உள்ளது.

அதை விட மேலாக இங்கு ஆம்னி பேருந்துகளே வந்து செல்ல இயலாத வகையில் பேருந்துநிலையத்திற்கு முன்னதாக உள்ள திருப்பத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்துநிலையம் முன்பாக வந்து ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வர இயல்வதில்லை. மாறாக வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகளை பார்வதிபுரம் சென்று திரும்பி அதன் பின் வெட்டூர்ணிமடம், WCC கல்லூரி திருப்பம் மார்க்கமாக ஆம்னி பேருந்துநிலையத்திற்கு பேருந்துகள் திருப்பிவிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்கும் ஆம்னி பேருந்துகள் மீது போலீசார் அபராதம் வேறு விதிக்கின்றனர்.
காதை சுற்றி மூக்கைத் தொடும் கதையாக ஆம்னி பேருந்துகளை அலையவிடுவதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பல பேருந்துகளும் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வராமலே செல்கின்றன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகும் நிலை உள்ளது.

இதனால் பேருந்து நிலையம் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாததுடன் இங்கு வரும் பேருந்துகளை நம்பி உள்ள புக்கிங், பார்சல் வணிக நிறுவனங்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளன..
எனவே பரிதவிப்பிற்கு உள்ளாகும் பயணிகள் படும்பாட்டை போக்கிடும் வகையில் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் எளிதாக செல்வதற்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அகற்றிட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.