மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தி விட்டது. தொடக்கத்தில் கொங்கன் மண்டலத்தில் உள்ள மும்பை, தானே, பால்கர், ராய்காட், சிந்துதுர்க், ரத்னகிரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. பின்னர் மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூரை புரட்டி எடுத்தது. வரலாறு காணாத மழையால் 5 மேற்கு மாவட்டங்களும் பெரும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. கோலாப்பூர் மற்றும் சாங்கிலி ஆகிய இரு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேற்கண்ட 5 மாவட்டங்களிலும் மழைக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே வெள்ள நிவாரண பணிகளுக்காக மாநில அரசு சார்பில் முதல் கட்டமாக ரூ.154 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மாநில மந்திரி சபை கூடியது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் வெள்ள நிவாரண பணிகளை செய்வதற்காக ரூ.6 ஆயிரத்து 813 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு வெள்ள நிவாரண தொகையை விடுவிக்கும் வரையில் மாநில அரசு சார்பில் அந்த பணத்தை செலவு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இதில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள கோலாப்பூர், சாங்கிலி மற்றும் சத்தாரா மாவட்டங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 708 கோடியும், கொங்கன் மண்டலம், நாசிக் மற்றும் மாநிலத்தின் இதர மாவட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 105 கோடியும் நிதியுதவி வழங்க கோரப்பட்டு உள்ளது. கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்துக்கு ஒதுக்கப்படும் தொகையில் ரூ.300 கோடி மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், இதர உதவிகளுக்காகவும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.












