ராமேசுவரம் காளவாய் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் பகவதி என்ற ஜனனிக்கும் கோவை சூலூரைச் சேர்ந்த கெளதம் ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது. இதையோட்டி மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) ராமேசுவரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு மணமகள் வீட்டின் சார்பில் தாம்பூல பை வழங்கப்பட்டது. இந்த துணிப் பையிலிருந்த அட்டைப்பெட்டியில் புங்கன், வேம்பு, பூவரசு, சரக்கொன்றை, நெல்லி, நாவல் ஆகிய விதைப் பந்துகள் இருந்தன. ஒருவர் எத்தனை விதைபந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
தாம்பூலப் பையில் “இது இயற்கை அன்னையைக் காப்பதற்கான எங்களின் சிறு முயற்சி. இந்த முயற்சியை வெற்றி ஆக்குவதும் மேலும் தொடர்வதும் உங்கள் கைகளில்” என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தது.













