திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போன்ற தமிழக கிராமங்களில், அவ்வப்போது ஓஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். ஓஎன்ஜிசி நிறுவனம், மீத்தேன், ஷெல் கேஸ் எடுப்பதாகவும் அவர்கள் புகார் எழுப்பி வந்தனர். இந்நிலையில், ஓஎன்ஜிசி அவ்வாறான பணிகளில் ஈடுபடவில்லை என, அதன் செயல் இயக்குநர் ஷியாம் மோகன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பில் 9 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது. இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கி வைக்கும் வினா நேற்று (செப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் ஷியாம் மோகன், தங்களுக்கு மீத்தேன், ஷெல் கேஸ் எடுக்க எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை என்றும், இயற்கை வாயு, கச்சா, ஆகியவற்றைத்தான் எடுப்பதாகவும் கூறினார். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் தீப்பிடித்து எரியும் காட்சிகளை தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனங்களுடன் இணைத்து சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படுவதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“ஓஎன்ஜிசி தமிழ்நாட்டில் மீத்தேன், ஷெல் கேஸ் எடுத்ததில்லை. இனியும் எடுக்கப் போவதில்லை. அவற்றை எடுக்க எங்களுக்கு எந்த அனுமதியும் கிடையாது. இதில் எந்த மாற்றமும் இல்லை”, என அவர் தெரிவித்தார்.