சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக திரும்பிய திசை எல்லாம் காட்டாற்று வெள்ளம் – கடைகள் மற்றும் குடியிருப்புகள் அருகே சூழ்ந்த காட்டாற்று வெள்ளத்தால் வியாபாரிகள் அவதி
வடகிழக்குப்பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதலே தூத்துக்குடி மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது.
தொடர்ந்து மாலை 3 மணி அளவில் சாத்தான்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலான நிலையில் தற்போது வரை மழை பெய்து வருகிறது.
இதனால் சாத்தான்குளம் மெயின்பஜாரில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மழை நீர் சாலையோரம் உள்ள கடைகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் சாலையில் செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன.
குறிப்பாக சாத்தான்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது- இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.








