பன்றிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி கோட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் இந்தாண்டு புரட்டாசி பட்டத்தில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், கம்பு, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, வெள்ளைச்சோளம் போன்ற பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மக்காச்சோள பயிர்களை பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஒடித்தும், சேதப்படுத்தியும் வருகின்றன. மேலும், பன்றிகள் தாக்கியதால் கம்பத்துப்பட்டியைச் சேர்ந்த அய்யரப்பன், அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், ராமசாமி, சண்முகராஜ் ஆகியோர் காயமடைந்து, பாதிக்கப்பட்டனர். கடந்த 4 ஆண்டுகளாக பன்றிகள் அட்டகாசத்தால் நஷ்டம் அடைந்து வரும் விவசாயிகள், அதனை கட்டுப்படுத்த தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை 10.30 மணிக்கு விவசாயிகள் கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனபதி, சேதுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிந்தலக்கரை விவசாயிகள் சங்க தலைவர் அய்யாத்துரை, த.மா.கா. வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் சங்கையா, சோலைச்சாமி மற்றும் விவசாயிகள் ஆதிமூலம், நவநீதன் உள்ளிட்ட எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுடன் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து, கோட்டாட்சியர் அறை முன்பு அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் போலீஸார் 4 பேர் மட்டும் வந்து கோட்டாட்சியரிடம் மனு அளிக்க கேட்டுக்கொண்டனர். ஆனால், நாங்கள் வெளியிலேயே அமர்ந்திருக்கிறோம். கோட்டாட்சியரை வெளியே வந்து பதில் அளிக்க சொல்லுங்கள் என விவசாயிகள் கூறினர். அப்போது கோட்டாட்சியர் க.மகாலட்சுமி ஆன்லைன் மீட்டிங்கில் இருந்ததால், அதனை முடித்துக் கொண்டு வெளியே வந்து விவசாயிகளிடம் பேசினார். இதில், பன்றிகளை கட்டுப்படுத்த நாங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தால், நீங்களே சுட்டுக்கொல்லுங்கள் என பதில் வருகிறது. எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிரந்தர தீர்வு வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று, 10 நாட்களுக்குள் நல்ல முடிவெடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் எம்.தெய்வேந்திரன், நிர்வாகிள் முத்துக்காந்தாரி உள்ளிட்டோர் வந்து வழங்கிய மனுவில், கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளம் கிராமத்தில் மாரியம்மாள் என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கத்திரி செடிகளை குருமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மான்கள் சேதப்படுத்திவிட்டன. இதுகுறித்து குருமலை வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர், விசாரணை நடந்து முடிந்தபின்னர் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, உரிய விசாரணை நடத்தி இழப்பீடு பெற்றுத்தர வேண்டுமென, தெரிவித்திருந்தனர்.









