தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி மற்றும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள்,பதிப்பகத்தார், வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன.
தூத்துக்குடியை பொறுத்தவரை கடந்த நவம்பர் 22 ல் புத்தகக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதிலும் உள்ளூர் எழுத்தாளர்கள் பலர் இடம்பெறவில்லை. அப்போதே அது குறித்து சிலர் கலெக்டருக்கு நினைவூட்டினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா தூத்துக்குடியில் தொடங்கியது. அதிலும் மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தனு பதிப்பக உரிமையாளரும், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான இதழாளர் அய்கோ தூத்துக்குடி கலெக்டருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
உங்கள் சொந்த செலவில் அல்ல, அரசு செலவில் – மக்கள் செலவில் புத்தக கண்காட்சி நடத்துகிறீர்கள். அதன் முதன்மை நோக்கம், வாசகர், எழுத்தாளர், பதிப்பகத்தாரை ஊக்குவித்து புத்தக புத்தாக்கத்துக்கு வழி வகுப்பது தான். குறிப்பாக, மாவட்டத்து வாசக, எழுத்தாள, பதிப்பக அன்பர்களை உந்துவதற்காகவே மாநில அரசு மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடத்துகிறது.
கடந்த நவம்பரில் நடந்த புத்தகக் கண்காட்சியின்போதே மாவட்ட எழுத்தாளர்கள் பலர் மறுதலிக்கப்பட்டனர். அதை புலனம் மூலம் தங்களுக்கு எடுத்துரைத்தேன். கால அவகாசம் இல்லையென்பதால் அந்த ஆலோசனைகளை நீங்கள் செயலாக்கவில்லை. ஆனாலும், இனி கவனத்தில் கொள்வதாக பதிலளித்தீர்கள்.
இம்முறை இந்த புத்தக கண்காட்சி தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அலுவல் சாரா உறுப்பினரிடம் நேரிலும் தங்களிடம் புலனத்திலும் தெரிவித்தேன். அதுமட்டுமின்றி, இம்மாதம் உழவர் குறைதீர்க்கும் நாளன்று தங்களை நேரில் சந்தித்து மனுவாகவும் அளித்தேன்.

அரசு செலவில் நடக்கும் ஒரு விழாவில், அதுவும் 11 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகளில், நாளுக்கு இருவர் வீதம் மேடையேற்றினாலும், மாவட்டத்தில் உள்ள என்போன்ற கால்நூறு எழுத்தாளர்களை நீங்கள் கவுரவிக்கலாம். அதாவது, அவர்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கான மரியாதை – அவ்வளவே!
இது இரண்டாம் முறை புறக்கணிப்பு, எனக்கு மட்டுமல்ல, என் போன்ற ஏழை எழுத்தாளர் பலருக்கும் .
இனியொரு இலக்கிய விழாவை இத்தகைய அலட்சிய பாவத்துடன் நிகழ்த்த நிச்சயம் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்பதை விலக்கிவைத்த இலக்கிய கர்த்தாக்கள் அனைவரின் சார்பிலும் துலக்கமாக கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளார். இக்கடிதத்தை கலெக்டர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்
இதேபோல், கலைமாமணி விருது பெற்ற எழுத்தாளர் தாமரை செந்தூர் பாண்டி,,தேரிகாட்டு எழுத்தாளர் கண்ண குமர விஸ்வரூபன் ஆகியோரும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.