அதிமுக ஆட்சி காலத்தில், ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றிய புகாரை தொடர்ந்து தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது முன் ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, விருதுநகர் மாவட்ட போலீசார் 8 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
அவரின் செல்போன் தொடர்பை பின்தொடர்ந்த போலீசார் இன்று கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் நடுரோட்டில் காரை மறித்து கைது செய்தனர். அவரோடு சேர்ந்து பாஜகவை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டப் பொதுச்செயலாளர் ஓசூர் சானமாவு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், அவரது உதவியாளர் நாகேஷ், கிருஷ்ணகிரி பாஜக நகர செயலாளர் ரமேஷ் மற்றும் விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகர் பாண்டியராஜ் ஆகியோரையும் கைது செய்தனர்.
ராஜேந்திர பாலாஜி தலைமறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் உதவியதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் கைது செய்யப்படுவார்களா என்பதை கூற மறுத்துவிட்டனர். குற்ற வழக்கில் தேடப்பட்ட ஒருவரை , சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள் பாதுகாத்தது சட்ட விரோதம் என்பதால், சரியான ஆதாரங்களை சேகரித்து அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்றே தெரிகிறது.