முளைப்புத் திறன் இல்லாத மக்காச்சோள விதைகளை வழங்கிய தனியார் விதை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் தலைமையில் விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு, முளைப்புத் திறன் இல்லாத மக்காச்சோள விதைகளை வழங்கிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், ‘ கோவில்பட்டி கோட்டம் மானாவாரி விவசாயம் மிகுந்த பகுதியாகும். பெரும்பாலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு புரட்டாசி மாதம் முதல் விவசாயிகள் தங்களது நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் போன்ற விதைகளை விதைத்து வருகின்றனர். இவற்றில், மக்காச்சோள விதைகளை பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு என்.கே. 7328, 6540, 6514, 6110 ரக விதைகளை வாங்கி விவசாயிகள் விதைத்தனர். இந்த ரக விதைகளுக்கு முளைப்பு திறன் இல்லாததால், 15 நாட்கள் முடிவடைந்த நிலையில் அப்படியே மக்கிப்போய் விட்டன.

இதனால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்தும் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டுள்ளது. தற்போது பருவம் தவறிவிட்டதால், இனிமேல் மக்காச்சோளம் விதைப்பு செய்ய முடியாது. இதுகுறித்து விதைகள் வாங்கிய தனியார் கடைகளில் கூறினால், அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். எனவே, விதை ஆய்வாளர் கொண்டு, சம்பந்தப்பட்ட மக்காச்சோள விதைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ எனக் கூறியிருந்தனர்.