கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்காமல் சாக்கடையில் இறக்கி வேலை செய்ய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் புத்தகத்துடன் சென்று, சட்ட விதிகளை சுட்டிக்காட்டி தமிழ்ப்புலிகள் கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர் .
தமிழ்ப்புலிகள் கட்சி தென் மண்டல வழக்கறிஞர் அணி துணை செயலாளர் எஸ்.எஸ்.எம்.பீமாராவ் உள்ளிட்டோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நின்று முழக்கமிட்டனர். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் சட்டப் புத்தகத்துடன் புகார் மனு ஒன்றை வழங்கினர்.
அதில், ‘கடந்த 15-ஆம் தேதி கோவில்பட்டி வக்கீல் தெரு வழியாக சென்றபோது, அங்குள்ள திருமண மண்டபம் அருகே மனித உயிருக்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் நுண்கிருமிகள் நிறைந்த கழிவுநீர் கால்வாயில், ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த சர்க்கரை என்பவரின் மகன் முருகன் உள்ளிட்ட 2 பேர் எந்தவித பாதுகாப்பு கருவிகள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் கால்வாயில் சட்டவிரோதமாக இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, கோவில்பட்டி நகராட்சி அதிகாரிகள் பணித்ததன்பேரில் வேலை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 18-ஆம் தேதி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்தேன்.
கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குள் உள்ள உள்ளாட்சி நிர்வாகம், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆலைகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் எந்தவித பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் தொடர்ந்து பணி செய்ய பணித்து வருவதாக தெரிகிறது. இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதுபோன்ற மனித உரிமைக்கு விரோதமாக பணியமர்த்துவதை தடுப்பதும், தூய்மை தொழிலாளர்களை அந்த தொழில் செய்வதில் இருந்து மீட்டு மறுவாழ்வு மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கல்வி, வேலை செய்து கொடுக்க வேண்டியது சட்டப்படியான கடமையாகும்.
எனவே, தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் சாதிய உள்நோக்கமும், மனிதாபிமானமற்ற முறையிலும், மனித உரிமைகளுக்கு எதிராக பணியமர்த்தும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, தனியார் ஆலை மேலாளர் மற்றும் உரிமையாளர்கள் மீது வரும் புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.









