தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்த சங்கரவேல் மகன் உதயகுமார் (54). நங்கை மொழி ஊராட்சியின் முன்னாள் தலைவர். இவர் தனக்கு சொந்தமாக நாசரேத் பகுதியில் இருந்த 62 செண்ட் நிலத்தை, 2006ஆம் ஆண்டு ஜெயபாண்டியன் என்பவருக்கு பொது ஆவணம் எழுதி கொடுத்து, ஜெயபாண்டியன், மோகன் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்து, மோகன் அந்த நிலத்தை கடந்த 2010ஆம் ஆண்டு பிரின்ஸ் ரோசரி அருளானந்த் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்தார்.
இந்நிலையில், தான் ஏற்கனவே கிரையம் செய்து கொடுத்த அந்த நிலத்தை, தனது மனைவி சுகந்திக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்து உதயகுமார் மோசடி செய்ததாக பிரின்ஸ் ரோசரி அருளானந்த் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் உதயகுமாரை மாவட்ட குற்றப் பிரிவு –– II போலீசார கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்டம் நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர், இன்று உதயகுமாருக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து, சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட செயல்பட்டதாக மாவட்ட குற்ற பிரிவு – II போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.









