தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ கழிவு கையாளும் நிறுவனங்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதி 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், புறநோயாளிகள் பிரிவு, கால்நடை ஆஸ்பத்திரிகள், விலங்கினங்களின் சோதனை கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆஸ்பத்திரிகள்,
ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு இந்த விதி பொருந்தும்.
இந்த விதியின் கீழ் மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும், படிவம் 2-ல் மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு விண்ணப்பம் செய்து படிவம் 3-ல் அங்கீகாரம் பெற வேண்டும்.
அந்த அங்கீகாரம் காலாவதி தேதி மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படும். தேசிய பசுமை தீர்ப்பாயம், மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை செயல்படுத்த தவறியவர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை விதிக்க உத்தரவிட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.








