மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதத்துக்கு நிகராக தமிழக மீடியாக்களில் தூக்கி பிடிக்கப்படுகிறது ஒரு கடிதம். அது மகன் விஜய் பற்றி பெருமிதத்துடன் ‘அம்மா சொல்றேன் கேட்டுக்குங்க…’ பாணியில் எழுதப்பட்ட கடிதம்.
கடிதத்தில் ரஜினிக்கு பிறகு சூப்பர் ஸ்டாராக வருவார் என மகன் குறித்து உறுதிபட தெரிவித்துள்ளார் ஷோபா. அதாவது, ‘சுருங்கக்கூறின் திரு எம்.கே.தியாக ராஜ பாகவதர், திரு. எம்.ஜி.ராமச்சந்திரன், திரு .ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்…’என தன் கடிதத்தை முடிக்கிறார் ஷோபா.
அம்மா சொல்றதை கேட்கலாம் என்றால், அடுத்த நொடியே தமிழகத்தின் தவப்புதல்வி திரிஷா,‘ அஜித் தான் சூப்பர் ஸ்டார்’ என சொன்னதை மீடியாக்களில் வழியவிடுகின்றனர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொண்ட திரிஷா அதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறார்.
‘சூப்பர் ஸ்டார் யாரென தெரியவேண்டியது அவசியம். அப்போதுதான் இருக்கிற பிரச்சினைகளை மறந்து பொழுதுபோக்கமுடியும்’ என திண்ணை பேச்சு வீரர் ஒருவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.















