கடம்பா குளத்தில் மணல் அள்ளுவதில் தகராறு – சரமாரியாக தாக்கிய நபர்…! வீடியோ மூலம் போலீசார் விசாரணை…!

0
2305

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
“கடலில் பாதி கடம்பா” குளம் என அழைக்கப்படும் கடம்பா குளத்தில் இருந்து வண்டல் மண் எடுத்து அதனை செங்கல் சூளை உரிமையாளர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தது.

இந்த நிலையில் கடம்பாகுளத்தில் உரிய அரசு அனுமதியுடன் அத்திமரபட்டி பகுதியை சேர்ந்த சிவசக்திவேல் (35) என்பவர் டிராக்டரில் வண்டல் மண் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது மேல கடம்பா பகுதியை சேர்ந்த சிங் (35) என்பவர் சிவசக்திவேலின் டிராக்டரின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே நின்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிவசக்தி வேல், சிங்கின் இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் தள்ளி நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிங் டிராக்டரில் அமர்ந்திருந்த சிவசக்திவேலை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து குரும்பூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிங்கை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிவசக்திவேல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் மணல் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத்தனர். நேரிலும் கோரிக்கைகளை விளக்கினர்.

அதில், ‘சில நாட்களுக்கு முன்பு கடம்பா குளத்தில் மணல் கொள்ளையடித்தவர்களை பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் கண்ணெதிரே தப்பியுள்ளனர். உடனடியாக தவறவிட்டவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்கள் பயன்படுத்திய டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

இதை ஏரல் வட்டாட்சியர் மற்றும் குரும்பூர் காவல் நிலையத்தாருக்கு ஏற்கனவே தெரிவித்த நிலையில் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

குளங்கள், ஏரிகளில் விவசாயிகள் மண்பாண்டம் செய்பவர்கள் மட்டும் மண் எடுப்பதை வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மண்வெட்டி கடப்பாரை தவிர எந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. மூன்று அடிக்கும் மேல் ஆழமாக தோண்ட கூடாது. நடுக்குளத்தில் இருந்து தொடங்க வேண்டும். கரைகளை செப்பனிட்டு சரிபார்த்த பின்பே உள்ளே டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் மட்டும் இறங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.

மண் கொள்ளைக்கு ஆதாரமாக புகைப்படங்களை அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here