நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து கார்சாகுபடிக்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் இன்று முதல் 137 நாட்களுக்கு திறந்துவிடப்படும் என தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு , பாபநாசம் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, பாளையங் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், மருதூர் கால்வாய் உள்ளிட்ட 11 கால்வாய்கள் மூலம் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள்பாசன வசதியை பெறும்.
தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 136 அடியாக உள்ளது அணைக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் அணைக்கு இன்னும் சில தினங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து விடும் ஏற்கனவே அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணை திறப்பு நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வஹாப், நயினார் நாகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோன்று நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பச்சையாறு அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதிலும் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.