விக்ரம் லேண்டர் போலி படம் டுவிட்டரில் உலா

0
518

நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 என்ற விண்கலம் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவியது. ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியதுதான் சந்திரயான்-2 விண்கலம். விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் கடந்த 2-ந் தேதி தனியாக பிரிந்தது.

சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த 1,471 கிலோ எடை கொண்ட லேண்டரை நேற்று முன்தினம் அதிகாலை 1.54 மணிக்கு நிலவின் தென்துருவ பகுதியில் சுமார் 1½ கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் ஆகிய இரு பெரிய பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதள பரப்பில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து சமிக்ஞை மூலம் விக்ரம் லேண்டரின் கீழ் பகுதியில் உள்ள 4 என்ஜின்களும் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து லேண்டர் நிலவின் நிலப்பகுதியை நோக்கி வேகமாக இறங்கியது. லேண்டரை மெதுவாக தரை இறக்குவதற்காக சமிக்ஞை மூலம் அதன் வேகத்தை விஞ்ஞானிகள் படிப்படியாக குறைத்தனர். அப்படி கீழ் நோக்கி வரும் சமயத்தில், நிலவின் தரைப் பகுதியில் இருந்து 2.1 கி.மீ. உயரத்தில் இருந்தபோது லேண்டருடன் தகவல் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த விஞ்ஞானிகள், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை.என்றாலும் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ஆர்பிட்டர் நிலவுக்கு அருகே தென்துருவ பகுதியில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறது. அதில் ஆய்வு கருவிகளும், நிலவின் தரை பகுதியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் சக்திவாய்ந்த கேமராவும் பொருத்தப்பட்டு இருப்பதால் மாயமான லேண்டரை பற்றிய தகவல் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் கிடக்கும் விக்ரம் லேண்டர் என சமூக வலைதளங்களில் ஒருபடம் வைரலாகி உள்ளது. இந்த படங்கள் “இஸ்ரோ தலைவர் கே.சிவன் வெளியிட்டதாக” தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.ஆனால் இந்த படங்கள் போலியானவை என விண்வெளி பத்திரிகையாளர் ஜொனாதன் ஓ’கல்லகன் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதே நேரத்தில், சந்திரயான் -2வின் லேண்டர் ‘விக்ரம்’ உடனான இணைப்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை இஸ்ரோ தொடர்கிறது, ஆனால் நிபுணர்கள் கூறுகையில், நேரம் முடிந்துவிட்டது, மேலும் தகவல்தொடர்புகளை மீண்டும் நிறுவுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பது தெரிகிறது என கூறி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here