பணம் கட்டி 5 மாதமாகியும் சர்வே செய்யாததால் ஏரல் தாலுகா அலுவலகத்தில் பெண் தர்ணா

0
1055

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பொன் ராணி (52). நாசரேத் நகர மகளிர் கூட்டமைப்பு தலைவியாக உள்ளார்.

இவர் வீட்டை அடுத்து செல்லத்துரை என்பவர் தனது மனைவி அன்பு பெயரில் வீடு கட்டி வந்தார். பொதுப் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதால் இது குறித்து பொன்ராணி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து பொன் ராணியை செல்லத்துரை மிரட்டியதாக கூறப்படுகிறது பொன்ராணி போலீசில் புகார் செய்யவே, இடத்தை சர்வே செய்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதுவரை வீடு கட்டும் பணியை நிறுத்துமாறு கூறினர்.

போலீசார் அறிவுரைக்கு ஏற்ப பொன்ராணி நிலத்தை அளப்பதற்கு சர்வே கட்டணம் கட்டினார். தாசில்தார், நாசரேத் பேரூராட்சி அதிகாரிக்கும் இதுகுறித்து மனு அளித்தார். ஆனாலும், பொதுப் பாதையை சர்வே செய்ய வருவாய்த் துறையினர் மாதக்கணக்கில் இழுத்தடித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செல்லத்துரையும் போலீசார் அறிவுரையை மீறி அவசர, அவசரமாக வீட்டை கட்டி முடித்து விட்டார்.

தனக்கு சட்டரீதியாக நியாயம் கிடைக்கும் என்று காத்திருந்த பொன்ராணி இதனால் வேதனை அடைந்தார். சர்வே பணம் கட்டி சுமார் ஐந்து மாதங்கள் ஆன நிலையில், தாசில்தாருக்கும் கலெக்டருக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதை மறைக்கப்பட்டதாக எண்ணினார்.

எனவே, இன்று தனது உறவினர்களுடன் ஏரல் தாசில்தார் அலுவலகம் சென்றார்.அங்கு, தாசில்தார் அலுவலகம் முன்பு அமர்ந்து ‘ ஏழை என்றால் வருவாய்த்துறைக்கும் இளப்பமா?’, ‘ பாதையை அளக்க 16 வாரங்களா?’ என்று இரு கைகளிலும் பதாகைகளை ஏந்தி,’ நீதி வேண்டும், நிலத்தை அளக்க வேண்டும் ‘ என்று முழக்கமிட்டார்.

இதையடுத்து தனது அறையில் இருந்து வெளியே வந்த தாசில்தார் கைலாச குமாரசாமி மற்றும் துணை தாசில்தார், பொன் ராணியிடம் விசாரித்து உடனடியாக சர்வே செய்வதாக உறுதியளித்தார். இதை எடுத்துக் கொண்டு அணியும் உறவினர்களும் எழுந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here