போதை பழக்கங்களை கைவிட ஒருநொடி

0
1394

குரங்குகள் மரக்கிளைகளில் எவ்வித சிரமமுமின்றி எளிதாகத் தொற்றிக் கொண்டு ஊஞ்சலாடுவது போல், தீய பழக்கங்கள் நம்மை மிக சுலபமாக தொற்றிக் கொள்கின்றன.

ஊதுவர்த்தி புகைக்கே மூக்கைப் பொத்திக் கொண்டு முகத்தைச் சுழிக்கிறவன், பின்னர் சிகரெட் புகையை ரசிக்கத் தொடங்கி விடுகிறான். முதலில் பார்த்து ரசிக்கிறான். பின்னர், அதைப் பழகி பழகி இறுதியில் அது இல்லாமல் முடியாது என்ற நிலைக்கு வந்து விடுகிறான்.

பிச்சை எடுத்து பிழைப்பவர்களில் கூட சிலர் புகைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கையில் காசு இல்லை என்றால், கீழே கிடக்கிற துண்டுப் பீடிகளை பொறுக்கி எடுத்து புகைப்பவர்களும் உண்டு.

சிகரெட், பீடி ஆகியவற்றைக் கடந்து கஞ்சா, கோகெய்ன் போன்ற கொடிய போதை பொருட்களுக்கு அடிமையாகி ஆபத்தின் விளிம்பில் நிற்பவர்கள் ஏராளம். போதை மருந்தை ஊசியின் மூலம் தங்கள் உடம்பில் தாங்களே ஏற்றிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பழகி, அந்த பழக்கமே பின்னர் அன்றாட வழக்கமாகி, அவர்களின் வாழ்க்கை மயக்கத்திலேயே கழிகிறது.

மது பழக்கமும் அப்படிதான். அதன் மீது ஓர் அதீத கற்பனை. ருசி பார்ப்பதில் ஆர்வம். தொடக்கத்தில் கண்களை மூடிக்கொண்டு மருந்தைக் குடிப்பதுபோல் மடக் மடக்கென்று குடிப்பார்கள். போகப் போக அது அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதுபோல் மாறி விடுகிறது.

ஆனந்தத்திற்கும், ஆறுதலுக்கும் மதுவையே மருந்தாகவும், விருந்தாகவும் நியாயப்படுத்திக் கொள்கிறதே மனித மனம்! அதற்கு நியாய தர்மம் தெரியாதா? தெரியும்! ஆனால் அது மயங்குகிறதே!

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா‘ என்கிறது ஞானத்தமிழ். நல்லவையோ, கெட்டவையோ நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான். மற்றவர்களிடம் காணும் தீய பழக்கங்களை உற்று கவனிப்பதில் கண்களுக்கு ஓர் இன்பம்; அவற்றில் மனம் லயிப்பதுமுண்டு. மிடுக்குடன் புகைப்பவனையும், ரசனையுடன் குடிப்பவனையும் பார்த்து ரசித்து மனம் தள்ளாடுபவர்கள் உண்டு. அத்தருணங்களில் மன வைராக்கியத்தை விட்டுவிடாமல், அவர்களை விட்டு விலகி நிற்கத் தெரிய வேண்டும். அப்படியெனில் தப்பித்துக்கொள்ள முடியும். சிக்கிக் கொண்டபின் மீள்வது கடினம்.

தண்ணீர் தேங்கி, சேறாகி, நிலம் இறுகி, பாசி படிந்து, அடித்தளத்தில் கனிந்து, தரைமட்டம் எதுவுமின்றிச் சொத சொதவென்று இருக்கும். புதைகுழிகள் அப்படிதான் உருவாகின்றன. அதில் யானையே விழுந்தாலும் உள்ளே போய்விடும்.

அப்படி தான் தீய பழக்கங்களும். அவற்றைப் பழகும் போது அவற்றால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை மனம் எண்ணிப் பார்ப்பதில்லை. எதிர்கொள்ளப் போகிற ஆபத்தும், அவஸ்தைகளும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால் போகப் போக தீய பழக்கங்கள் புதை குழியாகி மனிதனை முற்றிலுமாக இழுத்து பிடித்து அடிமையாக்கி அவனது வாழ்வுக்குச் சமாதி கட்டுகின்றன.

சூழ்நிலை பண்பு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்கிறது மனோதத்துவம். அதனால்தான் நட்பில், சகவாசத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திருக்குறள் உட்பட அனைத்து அற நூல்களும் வலியுறுத்துகின்றன.

குடிகாரர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு பொழுதைக் கழிப்பவன், முதலில் கொஞ்சம் தயங்குவான்; மெல்ல மெல்ல பழகுவான். பின்னர் ‘குடி இல்லையேல் வாழ்க்கை இல்லை‘ என்கிற அளவிற்குக் குடியில் தேறிவிடுவான்.

பல குடும்பங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த தவறிவிடுகிறார்கள். அவர்களின் தேவைகள், கோபங்கள், ஆசைகள் எதைப் பற்றியும் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.

அதனால்தான் பள்ளி பருவத்திலேயே இன்று பல இளைஞர்கள் போதை பழக்க வழக்கங்களுக்கும், பிற கெட்ட செயல்களுக்கும் அடிமையாகி தங்கள் வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் இன்றைய பரிதாப நிலை.

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போடுவது மட்டுமே என்பதை நம் பாட்டி, தாத்தா அறிந்து வைத்திருந்தார்கள்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது. வெற்றிலை போடும் நிறைய பேருக்கு இது தெரியுமோ தெரியாதோ! வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது, அந்தச் சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படையச் செய்கிறது. அதே சமயம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

நமக்கு ஏன் நோய் வருகிறது? உடம்பில் உள்ள வாதம், பித்தம், கபம் போன்றவை சரியான விகிதத்தில் இல்லாமல், கூடும் போதோ, குறையும் போதோ நோய் வருகிறது என்று சித்த வைத்தியமும் ஆயுர்வேதமும் கூறுகின்றன.

ஏனெனில், இந்த மூன்று சத்துகளும் சரியான விகிதத்தில் உடம்பில் அமைந்து விட்டால் நோய் வராது என்பதைவிட, நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது என்பது உண்மை. இந்த மூன்று நிலைகளையும் சீரான முறையில் வைக்க தாம்பூலம் உதவி புரிகிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தைக் கண்டிக்கக் கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தைப் போக்க வல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கிவிடும்.

இவை மட்டுமா! தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவை வாயில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. வெற்றிலை போடுவதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. இப்படி இருக்க, வெற்றிலை போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாகிறது? வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும்போது அது தீய பழக்கமாக மாறிவிடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்கப்பட்ட கொடிய தீய பழக்கம்தானே! கிராமப்புறங்களிலும், படிக்காதவர்களிடமும் இப்பழக்கம் அதிகமாக பரவியுள்ளது.

வாய்ப் புற்றுநோயினால் பாதிக் கப்பட்டவர்களில் பலர் புகையிலை பழக்கத்திற்கு அடிமையானவர்களே. கெட்ட விஷயங்களை பழகிக்கொள்வது மிக எளிது. பழகியபின் அவற்றிலிருந்து விடுபடுவது மிகக்கடினம்.

அதனால்தான் குடி குடியைக் கெடுக்கும் என்றார்கள். வேதங்கள் யாவும் ‘கள்ளுண்ணாதே‘ என்று கூறுகின்றன. ஆகமங்கள் தீட்சையை பற்றிச் சொல்லும் போது மதுவை விலக்குவதையே முதல் அறமாக உபதேசிக்கின்றன.

தீய பழக்கங்கள் நம்மைத் தொற்றிக் கொள்ளாமல் எப்படி அவற்றை மேற்கொள்வது? எண்ணமே நமக்குள்ளிருக்கும் தூண்டு சக்தி. எனவே மனதை சிறந்த எண்ணங்களால் நிரப்புங்கள். எப்போதும் அவற்றையே சிந்தியுங்கள். நல்லவர்களோடு சேருங்கள். நல்லவற்றையே செய்ய வேண்டும் என்று ஆசை கொள்ளுங்கள். உடல்நலனைப் பேணிக் காப்பதில் அக்கறை செலுத்துங்கள்.

தீய பழக்கங்களே விஷ வித்துகள். வளர விட்டுவிட்டால் அவை உங்கள் வாழ்வைச் சூறையாடி நிர்மூலமாக்கி விடும் தீயனவற்றையும், போதை பழக்கங்களையும் கைவிட ஒரே ஒரு நொடி போதும். உள்ளத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். உயர்ந்து நில்லுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here