தமிழக சட்டசபையில் இதுவரை 17 சபாநாயகர்கள் பதவி வகித்துள்ளனர். மெட்ராஸ் சட்டசபையின் முதல் சபாநாயகராக பதவி வகித்தவர் சிவசண்முகம் பிள்ளை. 1937ஆம் ஆண்டில் சென்னை மேயராக பதவி வகித்தவர் இவர். இவர் சபாநாயகராக மே 6, 1952 ஆம் ஆண்டில் இருந்து ஆகஸ்ட் 16,1955 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.
பின்னர் பலர் சபாநாயகர்களாக வந்தாலும், நெல்லை மாவட்டம் சபாநாயகர்களின் சங்கமமாக மாறியுள்ளது. இதற்கு முன்பு எஸ்.செல்லப்பாண்டியன் 31 மார்ச் 1962 முதல் 4 மார்ச் 1967 வரை சபாநாயகராக இருந்தார். சி.பா. ஆதித்தனார் 17 மார்ச் 1967 முதல் 12 ஆகஸ்ட் 1968 வரை பதவி வகித்தார். பி.எச். பாண்டியன் 27 பெப்ரவரி 1985 முதல் 5 பெப்ரவரி 1989 வரை இருந்தார். ஆவுடையப்பன் 19 மே 2006 முதல் 22 மே 2011 வரை சபாநாயகராக அவையை நடத்தினார். இப்போது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அப்பாவு சபாநாயகராக பணியாற்றவுள்ளார்.
ஏற்லனவே, செல்லப்பாண்டியன் நடுநிலையுடன் அவையை நடத்தியதாக பேர் பெற்றவர். பிஎச் பாண்டியன் வானளாவிய அதிகாரம் படைத்தவராக கூறிக்கொண்டு நீதிமன்ற உத்தரவுக்கே கட்டையை போட முயன்றவர். இப்படி நேர்மையும் தீரமும் மிக்க சபாநாயகர்கள் பதவி வகித்த பூமியில் அப்பாவுவின் பணியை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.