தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி பைனான்சியர் மார்ட்டின் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 5 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஒருவர் கொரனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் திருச்செந்தூர் ஆர்டிஓ கோகிலா தலைமையிலான அதிகாரிகள் மார்ட்டின் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் வீட்டில் நேரிடையாக சென்று விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதனடிப்படையில் ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், அதிகாரிகள் தகவல் தெரிவித்த நிலையில் மார்ட்டின் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பரிந்துரையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோரின் உத்தரவின்படி கொலை வழக்கில் ஈடுபட்ட பாபுசுல்தான், பாரிஸ், புகாரி, ரஸ்ரூதீன், சிந்தா ஆகிய 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.