தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் செந்தில் வேல் (35). இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்த நிலையில் நேற்று காலை தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், குளிர்பானத்தில் களைக் கொல்லி மருந்தை கலக்கி குடித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறிக்கொண்டு, களைக்கொல்லி மருந்தை குடிப்பதை வீடியோவாக பதிவு செய்து, அந்த வீடியோவை சாத்தான்குளம் காவல் ஆய்வாளருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவை அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரது கைபேசிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோவில் மூன்று பேர் பெயர்களை கூறி, இவர்கள்தான் தனது தற்கொலைக்கு காரணம் எனவும் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
வீடியோவை கண்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீசார், செல்போன் சிக்னல் மூலம் வீடியோ அனுப்பிய செந்தில் எந்த பகுதியில் உள்ளார் என்பதை கண்டுபிடிக்க நேற்று காலை முதல் நள்ளிரவு வரை தீவிரமாக தேடினர்.
ஆனாலும் கடும் மழை காரணமாக அவரது உடலை தேட முடியவில்லை. இந்த நிலையில், இன்று அதிகாலை சாத்தான்குளம் அருகே செந்தில்வேல் உடல் மற்றும் அவரது இரு சக்கர வாகனம் வாய்க்கால் கரையோரத்தில் இருந்ததை உறவினர்கள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.