கோவையில் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்: ரூ.1500 கோடி உற்பத்தி இழப்பு

0
921


நாடு முழுவதும் தொழிற்சாலைகள் சார்ந்த மூலப்பொருட்களான காப்பர், அலுமினியம், பேப்பர், பிளாஸ்டிக், சி.ஆர். சீட், ஸ்கிராப் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதனால் உற்பத்தி சார்ந்த தொழிலகங்கள் ஏற்கனவே எடுத்த ஆர்டர்களை செய்ய முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.


மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்னிறுத்தின. ஆனால், இதுவரை விலையேற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில்,நாடு முழுவதிலும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணைந்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.


இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கோவையில் மட்டும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கொடிசியா, சீமா, டேக்ட், கோஜிம்வா , காட்மா, கொசிமா, கௌமா, உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால், மாவட்டத்தில் சுமார் ரூ.1500 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.


கோவையில், சுந்தராபுரம், ஆவாரம்பாளையம், பீளமேடு, கணபதி, இடையர்பாளையம், நீலம்பூர் ஆகியவை தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள இடங்களாக உள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தொழிலகங்கள் முழுமையாக அடைக்கப்பட்ட சூழலில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.


இதுகுறித்து கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நல சங்கமான கோஜிம்வா அமைப்பின் தலைவர் திருமலை ரவி கூறுகையில், ‘
கிரில் தயாரிப்பு பொருத்தவரை ஆங்கில் ,பட்டா, தகடுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கடந்த ஆண்டு குறிப்பாக கொரோனா வுக்கு முன்பு கிலோ 40 முதல் 55 ரூபாய் வரை இருந்தது. ஆனால் தற்போது 75 முதல் 90 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக ஆர்டர்கள் வெகுவாக குறைந்துவருகிறது. வேலைக்கு இருக்கும் தொழிலாளர்களுக்கு முழுமையான வேலை கொடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. முன்பெல்லாம் ஓவர்டைம் கொடுக்கும் அளவிற்கு வேலை இருந்து வந்தது. குறிப்பாக சொல்லப்போனால் 30 சதவீதத்திற்கும் மேல் கிரில் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டது. 50 சதவீத நிறுவனங்கள் கடனில் தத்தளிக்கிறது.


கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் வரையிலான வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் கிரில் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்படும் ஜாப் ஆர்டர் எதுவும் இல்லாததால் இதை நம்பி இருக்கக்கூடிய மற்ற சிறு, குறு நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சம் தொழில்முனைவோர்
6 லட்சம் தொழிலாளர்களை கொண்டு தமிழகம் முழுவதும் இயங்கி வரும் கிரில் தயாரிப்பு கூடங்கள் இன்று மூலப்பொருள் விலை உயர்வால் நசிந்து வருகிறது. நலிந்து வருகிறது.


எந்தவித காரணமும் இன்றி எந்தவித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டுள்ள மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தலையிட்டு ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அதில் பிராந்திய அளவில் முக்கிய தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளையும் இணைத்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்’என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here