தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதியுதவியும் பெற்றிருத்தல் கூடாது. இது தொடர்பாக சான்றிதழ் அளிக்க வேண்டும்.
சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின்னரே வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை உரிய சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.









