கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்து வந்த மாணவி பொன் தாரணி நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில் சின்மயா வித்யாலயா பள்ளியில் பணிபுரியும் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி , பள்ளி தோழியின் தந்தை மற்றும் ஏற்கனவே வசித்து வந்த வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த முதியவர் ஒருவர் என மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார் .அந்த மூவரையும் சும்மா விடக்கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .
இதையடுத்து கோவை உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் மாணவியின் தற்கொலைக்கு அவர் படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்த தான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கினர். மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்னையா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துள்ளார். அப்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப் பட்டதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அப்போது ஆன்லைன் வகுப்பில் மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதை மாணவி பயத்தின் காரணமாக வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். பின்னர் நேரடி வகுப்புகள் தொடங்கியதும் ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது.
மேலும் சிறப்பு வகுப்பு உள்ளதாக மாணவியை பள்ளிக்கு அழைத்து சக்கரவர்த்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அதன் பின்னர் கொரோனா இரண்டாவது அலை முடிந்து வகுப்பிற்கு மாணவி பொன் தாரணி செல்லும் பொழுது மீண்டும் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார்
.இதுகுறித்து தனது ஆண் நண்பர் ஒருவரிடம் கூறி அழுதுள்ளார் .மேலும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர் .மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பொன் தாரணி தனது பெற்றோரிடம் அந்த பள்ளியில் படிக்க படிக்க பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார் .இதையடுத்து அவரது பெற்றோர் அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்நது பிளஸ் 2 படிப்பை தொடர்ந்துள்ளனர்.
ஆனாலும் சின்மயா வித்யாலயா பள்ளியின இயற்பியல் ஆசிரியர் மதன் சக்கரவர்த்தி பாலியல் தொந்தரவு தொடர்ந்து வந்தது. இதனால் மனவேதனை அடைந்த பெண் தாரணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது . மாணவியின் உறவினர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஏராளமானோர் அங்கு குவிந்து பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தாசில்தார் கோகிலவாணி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
இன்று பிரேத பரிசோதனை முடிந்துளள நிலையில் மாணவி பொன் தாரணி சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வரை உடலை வாங்க மாட்டோம் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப்போல மாணவியின் வீட்டின் முன்பு குவிந்த மகளிர் அமைப்பினர் முற்போக்கு ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கையில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவி ஏற்கனவே புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியை மீராவை கைது செய்ய வேண்டுமென்று பதாகைகளை பொதுமக்கள் ஏந்தி கோஷமிட்டு உள்ளனர்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உறுப்பினர் பிரியா மனோகரன் கூறியதாவது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை நேற்று இரவு கைது செய்துள்ளனர். அதேபோல பள்ளி தலைமை ஆசிரியை மீராவை கைது செய்ய வேண்டும். மேலும் இந்தப் பள்ளியை உடனடியாக மூட வேண்டும். அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ கல்லூரி மாணவ மாணவிகள் குவிந்து வருவதால் அந்த இடம் பரபரப்பாக உள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான போலீசார் மாணவியின் வீடு மற்றும் பிரேத பரிசோதனை கூடம் அமைந்துள்ள பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.












