தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த வீரப்பன் மனைவி வீரம்மாள் தஞ்சை போலீஸ் டி.ஐ.ஜியிடம் அளித்துள்ள மனுவில் ஆம்பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு வந்தார்.
அவர் என்னிடம் தான், மத்திய அரசில் வேலை பார்த்து வருவதாகவும், பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் கட்டினால் 2 மடங்கு தொகையும், ரூ.50 ஆயிரம் கட்டினால் 3 மடங்கு தொகையும், 1 பவுன் வழங்கினால் 2 மடங்காகவும், 10 பவுன் கொடுத்தால் 3 மடங்காகவும் திருப்பி தரப்படும் என ஆசை வார்த்தை கூறினார்.
இதை உண்மையென நம்பி நான் ரூ.3 லட்சமும், 11 பவுன் நகையும் கொடுத்தேன். மேலும் எனது உறவினர்கள் 10 பேரிடம் பணமும், 12 பேரிடம் நகை என மொத்தம் ரூ.10 லட்சமும், 135½ பவுன் நகையும் அந்த பெண்ணிடம் கொடுத்தேன்.
இந்த நிலையில் ஆம்பலாபட்டுக்கு சென்று அந்த பெண்ணிடம் தகவல் கேட்ட போது அந்த பெண் திட்டியதுடன், அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
பிரதமரின் பெயரை பயன்படுத்தி ஏமாற்றி, கொலை செய்து விடுவதாக மிரட்டிய பெண் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் பணத்தையும், நகையையும் மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதே போல் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனித்தனியாக புகார் மனு அளித்திருந்தனர்.














