தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பதவியேற்பதற்காக கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு யாத்திரையாக சென்னைக்கு புறப்பட்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பொறுப்பேற்ற பிறகு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாகவும் ஒரு திட்டம் இருப்பதாகவும் கூறினார் .கூட்டு முயற்சியாக செயல்பட்டு தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஒரு மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்பதில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

பாஜகவில் அனுபவமும் இளமையும் நிறைந்து இருப்பதாக கூறியவர், ‘மற்ற கட்சிகளை போல் பாஜக குடும்ப கட்சியாக, தனிமனித கட்சியாக செயல்படவில்லை என்று விமர்சித்தார்.
கோவையில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை செல்லும் அண்ணாமலைக்கு வழி முழுவதும் பிரமாண்ட வரவேற்பு அளிப்பதற்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று கோவையில் இருந்து புறப்படும் அண்ணாமலைக்கு பல்லடம், திருப்பூர், பெருந்துறை மற்றும் வழி முழுவதும் பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பு அளிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதனிடையே இன்று இரவு திருச்சியில் தங்கும் பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் நாளை காலை சென்னை புறப்பட்டு செல்கிறார்.

16ஆம் மதியம் 2 மணிக்கு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவி, தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மற்றும் மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.















