தடுப்பூசி கட்டாயம் இல்லை என்றாலும் மறைமுகமாக அதை செலுத்திக்கொள்ள பாமரர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். அதேபோல், கட்டாய முக கவச உத்தரவால் அதிகார வர்க்க சர்வாதிகாரம் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் சுகாதாரத்துறை மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கடந்த 27-05-2021 அன்று தகவல் அளித்துள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் பல மாநிலங்கள் மாஸ்க் அணிய வில்லை என்று கூறி வழக்கு பதிந்து அபராதம் விதிப்பது வாடிக்கையாக உள்ளது. கடந்த 13ஆம் தேதி சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பகுதிநேர பணி செய்துகொண்டு சட்டக் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவர் கொடுங்கையூர் போலீசாரால் தாக்கப்பட்டு பொய்வழக்குக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். பெண் ஆய்வாளர் ஒருவர் தலைமையில் போலீசார் அவர் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்துள்ளனர். இத்தனைக்கும் தான் மாஸ்க் அணிந்து வந்ததையும் அபராத தொகை செலுத்த முடியாத ஏழ்மைநிலையில் உள்ளதையும் கூறி மன்றாடியுள்ளார்.

சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடெங்கும் மாவட்டம் தோறும் சந்தேக கேஸ்கள் போல் முககவச வழக்குகள் போட்டு தண்டம் வசூலிக்கின்றனர்.
முக கவசம் போலவே தடுப்பூசியும் கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசால் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை மாநகராட்சியினர் கடை ஊழியர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் கட்டாய தடுப்பூசி போட்டுள்ளனர். 2 டோஸ் தடுப்பூசியும் பூஸ்டரும் செலுத்திய பின்னும் கொரோனா வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
அலோபதி மருந்தை மட்டும் ஆதாரமாக கொண்டு சுகாதார பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. தடுப்பு மருந்தாக அல்லாமல், குணப்படுத்தும் மருந்தாகவும் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதியில் பல மருந்துகள் இருப்பது முதற்கட்ட கொரோனா அலையின்போது அடையாளப்படுத்தப்பட்டன. ஆனால், அதை ஒன்றிய, மாநில அரசுகள் இன்னமும் பரிசீலனைக்கு ஏற்கவில்லை.
பென்சிலின் ஊசி போடும் முன்னர் கூட உடலில் சிறிதளவு பரிசோதித்து விட்டு போடுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால், எந்த சோதனையும் செய்யாமல்உடலுக்கு ஒத்துக் கொள்ளுமா என்று கூட பரிசோதிக்காமல் தடுப்பூசி செலுத்துவதால் ஆபத்தாகிறது.
எனவே, தடுப்பூசி போடுவதை , முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி காவல்துறை, வருவாய்துறை, சுகாதார துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களும், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்களும் மிரட்டி வருவதை அரசு உன்னிப்பாக கவனிக்கவேண்டும். அரசும் உடந்தையாக இருந்து கட்டாயப்படுத்தினால் அதையும் கண்டிக்கவும், தண்டிக்கவும் நீதித்துறை தான் துணிய வேண்டும். ஏனெனில், அதுவே இப்போதைக்கு சாமான்யர்களின் இறுதி நம்பிக்கையாக இருக்கிறது.