கொரோனா: டெல்லி முதல் நெல்லை வரை நீளும் அதிகாரிகள் அராஜகம்

0
984

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் சிலர் அசட்டையாக இருக்கிறார்கள் என்றால், அதிகாரிகள் பலர் அலட்சியமாக இருக்கின்றனர். அவர்கள் அலட்சியத்தோடு அராஜகமாகவும் நடப்பதால் பொதுமக்கள் அச்சத்தோடு இருக்கின்றனர்.
அரசு அதிகாரிகளின் ஆணவம் அதிதீவிரமாக ஆட்டம் போட்டது மத்திய பிரதேசத்தில்தான்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் நடத்திய கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பல்லவி ஜெயின் கொரோனா பாதிப்புடன் கலந்து கொண்டார்.
பல்லவியோடு, அக்கூட்டத்தில் இருந்த சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் வீனா சின்ஹாவுக்கும் கொரோனா தாக்கம் இருந்துள்ளது. இருவரின் மகன்களும் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து மத்திய பிரதேசம் திரும்பியுள்ளனர்.
தங்களது மகன்களின் டிராவல் ஹிஸ்டரியை மறைத்து அவர்களை வீடுகளில் தங்கவைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து இருவருக்கும் கொரோனா பரவி இருக்கிறது. ஆனால், தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அவர்கள் அலுவலக பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதே மாநிலத்தில், கடந்த 3ஆம் தேதி சுகாதாரத்துறை இயக்குநர் விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தென் ஆப்பிரிக்கா சென்று வந்த தகவலை மறைத்து வழக்கம்போல அலுவலக பணிகளில் ஈடுபட்டு வந்தது அப்போதுதான் தெரிந்தது.
இதனால் அதிர்ந்து போன சுகாதார துறையினர், 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், உதவியாளர்கள் என பலரையும் தனிமைப்படுத்தினர்.
கூட்டு சதி செய்யாத குறையாக கொரோனாவை திட்டமிட்டு பரப்பிய அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், மத்திய பிரதேச மனித உரிமைகள் ஆணையம் மாநிலத்தின் முதன்மை செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்திலும் அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் கொரோனா பரவிய கொடுமை நடந்துள்ளது.


சென்னை தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்க அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளிநாடு சென்று திரும்பியவர்களை தனிமைப்படுத்தியதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். இதனால் சிலர் வெளியே சுதந்திரமாக நடமாடினர்.
அங்கு ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த வந்த கணவன், மனைவி இருவரில், மனைவியை மட்டுமே தனிமைப் படுத்தினர். கணவர் வெளியே சுற்றிவந்தார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதேபோல், முண்டியாம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டெல்லி இளைஞர் மருத்துவமனை அதிகாரிகளின் கவனக்குறைவால் மாயமானார்.
ஆனாலும், அதிகாரிகள், மக்கள் அலட்சியத்துக்காக சில நடவடிக்கைகள் இல்லாமல் இல்லை.
சீனாவிலிருந்தும், பாக்தாத்தில் இருந்தும் சென்னை திரும்பி தனிமைப்படுத்தாமல் இருந்த தந்தை மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெங்களூர் ரயில்வே பெண் அதிகாரியின் மகன் ஜெர்மன் நாட்டிலிருந்து மார்ச் 13ம் தேதி இந்தியா திரும்பினார். அவரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியும் அவ்வாறு செய்யவில்லை. 5 நாட்களுக்குப் பிறகு அவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது தாயான அதிகாரிகயை ரயில்வே துறை பணியிடை நீக்கம் செய்தது.
அது ஏன், டெல்லி தொழிலாளர்கள் பஸ் முனையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர் குவிய காரணமானதாக ஐஏஎஸ் அதிகாரிகளே நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.
டெல்லி யூனியன் பிரதேச கூடுதல் தலைமை செயலர் (போக்குவரத்து), முதன்மை செயலர் (நிதி) ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கூடுதல் தலைமை செயலர் (வீடு மற்றும் கட்டடங்கள்), எஸ்டிஎம் (சீலாம்பூர்) ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையெல்லாம் அறிந்தோ, அறியாமலோ, சில அதிகாரிகளே பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதோடு, பொறுப்புடன் குடிமக்கள் அளிக்கும் தகவல்களை ஆராயாமல் அவர்கள் மீதே ஆத்திரம் கொள்வதும் நிகழ்கிறது.
நெல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாளிதழ் விளம்பர மேலாளர் தொடர்ந்து 12 நாட்கள் அலுவலகத்தில் புழங்கியுள்ளார். அதை அந்த அலுவலக பொது மேலாளர் தெரிந்தே அனுமதித்துள்ளார்.
இதுகுறித்து நாளிதழ் முதுநிலை செய்தியாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் தொழிற்சங்க பொதுச்செயலாளருமான இதழாளர் அய்கோ தகவல் தெரிவித்தும், காவல், வருவாய் துறையினர் அலட்சியமாக இருந்துள்ளனர். மாநகராட்சி ஊழியர்கள் மருந்து மட்டும் அடித்துச்சென்றுள்ளனர்.
அதனால், மீண்டும் காவல், வருவாய் அதிகாரிகளுக்கு பிரச்சினை குறித்து விவரித்து எழுதி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதனால் தங்கள் வீரத்துக்கே இழுக்கு வந்துவிட்டதாக வெகுண்டெழுந்த மாநகர போலீசார், பத்திரிகை நிர்வாகத்திடம் புகார் ஒன்றை பெற்றுக்கொண்டு பத்திரிகையாளரை வழக்கில் சிக்கவைக்க கொரோனா கடந்த தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து தகவல் வந்ததையடுத்து இதழாளர் அய்கோவிடம் கேட்டோம்.
‘சக ஊழியர் நன்மைக்காக நான் தெரிவித்த தகவலை அலட்சியப்படுத்தினர். ஆனால், பத்திரிகை நிர்வாகத்துக்கு மட்டும் அவர்களில் யாரோ போட்டுக்கொடுத்து விட்டனர். அதனால் பொது மேலாளர், விளம்பர மேலாளர் வருகைப்பதிவேட்டில் ஆதாரத்தை அழித்துவிட்டார்.
மேலும், மாநகர போலீசாரிடம் புகார் அளித்ததையும், அவர்கள் நிர்வாகத்துக்கு சாதகமாக காலம் கருதியிருப்பதையும் ஒரு தருணத்தில் அறிந்து கொண்டேன். எந்த நடவடிக்கைக்கும் காத்திருக்கிறேன்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here